விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றியைத் தொடர்ந்து,வரும் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி படத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால், உள்ளாட்சி அமைப்புகள் ஸ்தம்பித்துப் போய் உள்ளன. தமிழக அரசும் தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் ஏதேனும் சாக்குப் போக்கு கூறியே தேர்தலை நடத்தாமல் தள்ளி வைத்து வந்தது. இதனால் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் தேர்தலை நடத்த நெருக்கடி கொடுத்து வந்தன.
இதையடுத்து அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதியை அறிவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் உறுதி கொடுத்திருந்தது. அதன்படி, தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளிலும் மாநில தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி, தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவித்திருந்தது.
ஆனால் மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி, 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 9-ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது மற்றும் அதிமுகவில் நீறு பூத்த நெருப்பாக நிலவும் உட்கட்சி பூசல் போன்றவற்றால் அதிமுக தரப்பில் தேர்தலை நடத்த தயக்கம் காட்டுவதாகவே கூறப்பட்டது.
இந்நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வென்றால் உள்ளாட்சித் தேர்தலை தெம்பாக சந்திப்பது என்ற முடிவில் அதிமுக மேலிடம் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த இரு தொகுதிகளின் தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இன்று இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதல் சுற்று முடிவிலேயே, அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதியானதால் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உற்சாகமாக பேட்டியளித்தார். அவர் கூறுகையில், இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி உறுதியாகிவிட்டது. அதிமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களின் திடகாத்திரமான முடிவே இந்த வெற்றிக்கு காரணம் என்ற ஓபிஎஸ், தமிழகத்தில் வரும் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்பதையும் உறுதியாக தெரிவித்தார்.
இரு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி கொடுத்த தெம்பால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக தயாராகி விட்டது. எனவே தேர்தல் நடைபெறுவது உறுதி என்பதால், தமிழகம் அடுத்த தேர்தல் திருவிழாவுக்கு தயாராகி விட்டது.