பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்காகத் தான் என்றும், மனிதர்களுக்கு அல்ல எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பூஜை நடத்த அனுமதி வழங்கக் கோரி பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
பொலுவம்பட்டி காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவில். கார்த்திகை மகா தீபத்தை ஒட்டி டிசம்பர் 10 முதல் 12 ஆம் தேதி வரை மகா தீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் அனுமதி கோரி, ஆகஸ்ட் 20-ம் தேதி தமிழக அரசுக்கு அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு வனத்துறை, அறநிலையத் துறை, கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர். விசாரணையின்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது விலங்குகளுக்கு மட்டுமே. மனிதர்களுக்கு அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கை நவம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.