கொல்லிமலை சுற்றுலா தலமாகத் தான் அனைவருக்கும் தெரியும், ஆனால் கொல்லிமலை ஒரு வரலாற்று பின்னணி கொண்ட இடம் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லி மலைக்கு வேட்டைகாரன் மலை என மற்றொரு பெயரும் உண்டு. இந்த மலைக்கு கொல்லிமலை என பெயர் வந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஆனால் காணப்படுகின்ற அதிகப்படியான அரிய மூலிகைகள் காரணமாக மூலிகைகளின் ராணி என்ற பெயர் நிலைத்து நிற்கிறது, பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு இதிலெல்லாம் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் நிறையவே காணப்படுகின்றன. சுமார் கிபி 200-ல் இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரி ஆண்டாராம்.
ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக ஓரியின் திறனைப் புகழ்ந்து புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் சங்ககாலத்தில் அரிசில்கிழார் இளங்கீரனார் ஔவையார் மற்றும் பல புலவர்கள் கொல்லிமலையை பற்றி நிறையவே பாடுகின்றனர்.






