தமிழகத்தில் டெங்கு பரவாமல் தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் அதன் கூடுதல் செயலர் செல்வக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியை கண்காணிக்க வேலூர், கடலூர், திருச்சி, கோவை, சேலம் நெல்லை உள்ளிட்ட 9 மண்டலங்களில் பூச்சியியல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசுவை கட்டுப்படுத்தவும் அதன் உற்பத்தி குறித்து எடுத்துரைக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 28 ஆயிரத்து 547 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகப்படியாக 120 ஐந்து டெங்கு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் இந்த ஆண்டு மட்டும் 1.07 கோடி பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.