தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானம் வழங்கியது டபுள் புரமோஷன்

திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பதவியை பெற்றிருக்கிறார் தொழிலதிபர் சேகர் ரெட்டி. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் ரெட்டி பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கினார். மாநில அரசு மற்றும் ரயில்வே துறைக்கான ஒப்பந்த பணிகளை இவர் செய்து வந்தார். வலுவான அரசியல் பின்னணியை கொண்ட இவர் மணல் குவாரி தொழிலில் கவனம் செலுத்தினார்.

 

பல்வேறு தொழில்களிலும் சிறப்பு விளங்கிய இவருக்கு 2016 ஆம் ஆண்டு பெரும் சிக்கலான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 9ஆம் தேதியில் சேகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 108 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் சிக்கியது. இப்படி சிக்கிய பணத்தில் அப்போதுதான் அறிமுகமாகி பலருக்கும் குதிரைக்கொம்பாக இருந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் அடங்கும் இந்த புதிய நோட்டுகளில் மட்டும் 9 கோடியே 61 லட்சம் ரூபாய் ஆகும்.

 

இதற்கு மறுநாளே 24 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. இதைத்தொடர்ந்து அவரை சிபிஐ கைது செய்தது 2017ஆம் ஆண்டில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கப் துறையினரும் சேகரை கைது செய்தனர். இதன்பின் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக தமிழகத்தின் சார்பில் பதவி வகித்து வந்தார் சேகர் ரெட்டி. பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் அறங்காவலர் குழு பதவியை இழந்தார். சேகர் ரெடி தற்போது அதே பதவிக்கு நிகரான அந்தஸ்துடன் கூடிய அறங்காவலர் குழுவின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply