பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது, இதில் 239 மாணவ-மாணவிகளுக்கு 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள விலையில்லா மடிக்கணனி கணினியை தமிழக கால்நடைத்துறை அமைச்சரும், தமிழக அரசு கேபிள் டிவி வாரிய தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுமக்கள் வைத்திற்கும் மாற்று நிறுவன செட்டாப் பாக்ஸ்சை அரசு செட்டாப் பாக்ஸ்க்கு மாற்றுவதற்கு தயக்கம் காட்டுவதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரியம் சார்பில் தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 23ம் தேதிக்குப் பிறகு எந்தந்த பகுதியில் அரசு செட்டாப் பாக்ஸ் ஓடியதோ அந்தந்த வீடுகளில் மீண்டும் அரசு செட்டாப் பாக்ஸ் இணைப்பு கொடுக்கவேண்டும் என்றும், அதே நேரத்தில் அரசு நிர்ணயித்த 153 ரூபாய் மாத கட்டணத்தைவிட கூடுதலாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுமக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதையும் மீறி வசூலித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேட்டியின்போது தெரிவித்தார்.
மேலும், கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.






