கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமான பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தொடர் மழையின் காரணமாக ஒவ்வொரு வார விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டு வரும் பரளிக்காடு சூழல் சுற்றுலா வரும் சனி மற்றும் ஞாயிறு அன்று ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை காரணமாக நீலகிரி மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக விளங்கி வரும் பில்லூர் அணை தற்போது தனது முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியாக உள்ளது.

இன்று அதிகாலை 04.15 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 97 அடி.இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் நான்கு மதகுகளின் வழியாக திறக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்த நிலையில் பில்லூர் அணையின் நீர்த்தேக்கப்பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் பரளிக்காடு சூழல் சுற்றுலா வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ( 10-08-19 & 11-08-19 ) ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

வார விடுமுறைகளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரளிக்காடு சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது.இந்த சுற்றுலா முழுக்க,முழுக்க மலைவாழ் மக்களின் நலனுக்காகவே நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இச்சுற்றுலாவின் முக்கிய நோக்கமே பொதுமக்கள் வனத்தினையும்,வன விலங்குகளைப்பற்றியும்,மலைவாழ் மக்கள் குறித்தும் அறிந்து கொள்வது தான்.
மேலும்,இச்சுற்றுலாவானது பில்லூர் அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் மலைவாழ் மக்களின் சுக்கு காபியுடன் துவங்கும்.பின்னர்,வனப்பகுதிக்குள் வனத்துறையினருடன் டிரெக்கிங்,பரிசல் பயணம்,மலைவாழ் மக்களின் பாரம்பரிய மதிய உணவு,மூலிகை குளியல் என இயற்கையோடு இணைந்த ஒரு சுற்றுலா என்பதால் வார விடுமுறைகளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு இனிமையாக கழிக்க பொதுமக்கள் இச்சுற்றுலாவில் அதிக அளவில் கலந்து கொள்வர்.

இந்த நிலையில் பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணையின் நான்கு மதகுகளின் வழியாக வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.மேலும்,தொடர்ந்து மழை பெய்து வருவதால் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் ( 10-08-19 & 11-08-19 ) பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.






