ராம நதி அணையில் மணல் கொள்ளை! பொது மக்கள் வேதனை

நெல்லை மாவட்டத்தில் உள்ள ராமநதி அணை முறையாக தூர்வாரப்படாததால் தண்ணீரை சேமிக்க முடியாத அவலம் காணப்படுகிறது. மேலும் அணையின் கால்வாய் வழியே வெளியேறும் தண்ணீரும் ,அணை பகுதியில் மணலும் கொள்ளை போவதாக புகார் எழுப்புகின்றனர் பொது மக்கள். மேற்கு தொடர்ச்சி மழையில் பொழியும் தண்ணீரை சேமிக்கும் வகையில் ராம நதி அணை கட்டப்பட்டு இருக்கிறது.

 

விண்ணோடு முகில் விளையாடும் இடத்தில் பின்னனியில் கண்கொள்ளா எழிலுடன் காட்சி தருகிறது அந்த அணை. 84 அடி கொள்ளளவு கொண்ட ராம நதி அணை நீர் கால்வாய் வழியே வெளியேறி நதியாக ஓடுகிறது. கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களுக்கு குடிநீராக தாகம் தீர்ப்பதோடு, 17,000 ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதியும் அளிக்கிறது ராம நதி அணை.

 

1992 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது அடித்துவரப்பட்டு 30 அடிக்கு தேங்கிய மணல் அல்லப்படவில்லை என கூறுகின்றனர் விவசாயிகள். அணை மண் மேடாக இருப்பதால் எவ்வளவு மழை பெய்து, எவ்வளவு தண்ணீர் வந்தாலும் தேக்க முடியவில்லை என்பது விவசாயிகளின் வேதனை. மேலும் அணை பகுதியில் மணல் கொள்ளை அரங்கேறுவதாக குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் அவர்கள்.

 

மணல் கொள்ளை ஒரு புறம் அரங்கேறி கொண்டிருக்க அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் ஜம்மு நதியிலிருந்து திருடுவதாக அடுத்த அதிர்ச்சியையும் அளிக்கின்றனர் விவசாயிகள். சட்ட விரோதமாக இயங்கும் செங்கல் சூலைகளுக்கு தண்ணீர் திருடப்படுவதாக கூறுகிறார்கள் அவர்கள். ராம நதி அணையில் 30 அடிக்கு காணப்படும் மணல் மேட்டை அகற்றி தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாசாயிகளும்,கிராம மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.


Leave a Reply