கோவையில் போலியான ஆவணங்களை கொடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 28 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை சத்தி சாலை கணபதி நாராயணா நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் மணிவேல்.இவரது மகன் செந்தில் குமார்(எ)சத்தியராஜ்.இவர் ராமு என்பவரது மகள் ப்ரியாவை தனது உடன் பிறவா சகோதரி என்று சத்தி சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளரிடம் அறிமுகப்படுத்தி கோவை காளப்பட்டி சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள அப்பார்ட்மெண்டில் புதிய வீடு வாங்குவதற்கு வங்கியில் தேவையான ஆவணங்களை சமர்பித்து 28 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
பின்னர்,வீடு வாங்குவதற்காக கடன் பெற்று மாதத்தவணை தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.இதனால் வங்கி நிர்வாகம் செந்தில் குமாரையும்,ப்ரியாவையும் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.எனவே,சந்தேகமடைந்த வங்கி நிர்வாகம் கடன் பெற கொடுத்த ஆவணங்களை பரிசீலனை செய்த பொழுது அனைத்து ஆவணங்களும் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பேரில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சரவணம்பட்டி கிளையின் மேலாளர் வேதநாராயணன் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த 24/06/19 அன்று வங்கியில் போலியான ஆவணங்களை கொடுத்து 28 லட்ச ரூபாய் கடன் பெற்று கடன் தொகையினை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிய செந்தில் குமாரை கைது விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இதே நபர் கடந்த 2017 ஆம் ஆண்டு கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியிலும் போலியான ஆவணங்களை கொடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து 14 லட்ச ரூபாய் கடன் பெற்று பணத்தை திருப்பி செலுத்தாமல் வங்கியினை ஏமாற்றியதும் தெரிய வந்தது.எனவே,செந்தில்குமாரை இவ்விரண்டு வழக்குகளிலும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையில் போலியான ஆவணங்களை கொடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 28 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மற்றொரு வங்கியிலும் கடன் பெற்று மோசடி செய்ததும் அம்பலமாகியுள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.