நாளை உருவாகும் அர்னாப் புயல்!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை காலை புயலாக மாறக் கூடும். வரும் 27ஆம் தேதி தீவிர புயலாகவும், 28ஆம் தேதி அதி தீவிர புயலாகவும் மாறும். இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த பெயரான அர்னாப் என பெயரிடப்பட்டுள்ளது.
இது அதிதீவிர புயலாக ஆந்திராவின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே வரும் 28-ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. எனினும், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும். மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும். நாமக்கல், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி, நாகை, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இன்று அதிகாலை முதல் கோயம்பேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், ராயபுரம், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பரவலாக இடைவிடாமல் பெய்து வரும் மழை வருவது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




