அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பபட்டுள்ளது. அதில் பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதாக பள்ளி நிர்வாகி உறுதியளித்த பிறகு தான் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தற்போது சில தனியார் பள்ளிகளின் குடிநீர் வசதி இல்லை என தெரிவித்து பள்ளிக்கு விடுமுறை விடுவதாக பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிய வருவதாகவும், மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் இவ்வாறு விதிகளுக்கு முரணாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து பள்ளி தொடர்ந்து நடைபெற தங்குந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அந்தந்த பள்ளி நிர்வாகங்களின் கடமை என்றும், அவ்வாறு செயல்பட தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அனைத்து தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தவும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக விடுமுறை விடப்படாமல் தொடர்ந்து செயல்படுவதை கண்காணிக்குமாறும் அனைத்து முதன்மை கல்வி அலுவலகர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.