குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!
நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் இனிப்பு வழங்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அரசு சார்பில் இத்திட்டத்திற்காக 9 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் கோரப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் 62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் துண்டுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. ஒரு கேக் துண்டு 45 கிராம் எடை இருக்கும் அளவிற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசு கடுமையான நிபந்தனையை விதித்தது. அதன்படி, கேக்குகள் பெறப்படும்போது மொத்த காலாவதி காலத்தில் குறைந்தது 30 நாட்கள் மீதமிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
இந்த நிலையில் கேக் வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 4 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய பணி ஆணை வழங்கப்பட்டு 62,46,412 கேக் துண்டுகள் 7.54 கோடிக்கு கொள்முதல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





