10, 11, 12ஆம் பொதுத்தேர்வு எப்போது?
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2026-2027-ஆம் கல்வியாண்டில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். மார்ச் 17 முதல் ஏப்.12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி10 ஆம் வகுப்பிற்கு மார்ச் 17 ஆம் தேதியன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
ஒரு வார விடுமுறைக்கு பிறகு ஆங்கிலத் தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 31 ஆம் தேதி கணிதமும் 5 ஆம் தேதி அறிவியலும் 9 ஆம் தேதி சமூக அறிவியலும் நடைபெற உள்ளது. விருப்ப மொழிப் பாடத்துக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவு மே 20 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மார்ச் 5 ஆம் தேதி முதல் ஏப்ரல் 01 ஆம் தேதி வரை பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பை பொறுத்தவரை, மார்ச் 5 ஆம் தேதியன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. அன்றிருந்து சுமார் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 16 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்களுக்கு 18 ஆம் தேதியும், கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், வேளாண் அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு 22 ஆம் தேதியும் தேர்வு நடைபெற உள்ளது.
இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கு 24 ஆம் தேதி , கணினி அறிவியல், உயிரி-வேதியியல், புள்ளியியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் 30 ஆம் தேதியும் இறுதியாக ஏப்ரல் 1 ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. 12 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு மே 7 ஆம் முடிவுகள் வெளியாகும் என தோராயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 29 ஆம் தேதி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை பொறுத்தவரை 12 ஆம் வகுப்புக்கு மார்ச் 3 ஆம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுடன் பொதுத் தேர்வு தொடங்குகிறது.
அதன் பிறகு 4 நாள் விடுமுறைக்கு பிறகு திங்கட்கிழமையன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற உள்ளது.பின்னர் மார்ச் 12 ஆம் தேதியன்று வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல் புள்ளியியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கும் 19 ஆம் தேதி உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம் உள்ளிட்ட பாடங்களும் 23 ஆம் தேதி இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன.
கடைசிநாளாக 29 ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 20ம் தேதியும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 7ம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




