போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பொது மக்களே தங்களது செல்போனில் படம் பிடித்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. சாலையில் செல்லும் போது யாரேனும் போக்குவரத்து விதிகளை மீறினாலோ அல்லது போக்குவரத்து காவலர்கள் தங்கள் கடமையிலிருந்து தவறினாலோ நிகழ்விடத்திலிருந்தே பொது மக்கள் தங்கள் செல்போன் மூலம் புகார் அளிக்கும் வகையில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஜிசிடிபி சிட்டிசன் சர்வீசஸ் என்ற செயலியை பொதுமக்கள் தங்கள் செல்போனில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேப்பேரி அலுவலக ஆணையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த செயலியை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளார். இந்த செயலியால் என்ன பயன் கிடைக்கபோகிறது என்ற கேள்விக்கு காவல் துறை கூறும் பதில் என்னவென்றால் , மக்கள் இதன் மூலம் அளிக்கும் போக்குவரத்து புகார்கள் தொடர்பாக அப்பகுதியிலுள்ள போக்குவரத்து போலீசார் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.
அதே போல் செல் ஃபோன் கேலரியிலிருந்து ஏற்கனவே எடுக்கபட்ட படங்களை அனுப்ப முடியாது எனவும் நிகழ்வு இடத்திலே இருந்து படம் எடுத்து அனுப்பினால் மட்டுமே இந்த செயலி ஏற்றுக்கொள்ளும் என்றும் போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொடர்பான அனைத்து புகார்களையும் ஆலோசனைகளையும் இந்த செயலியின் மூலம் பொது மக்கள் அனுப்பலாம்.
அது தொடர்பாக எடுக்கபட்டுள்ள நடவடிக்கைகளையும் இந்த செயலி மூலமே தெரிந்து கொள்ளலாம். தாங்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் இந்த செயலி மூலமே பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இந்த செயலி மூலம் புகார் தெரிவிக்க வசதி ஏற்பட்டுள்ளதால் இனி பொதுமக்களிடமிருந்தே அதிக புகார் வரும் என எதிர்பார்ப்பதாக காவல் ஆணையார் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க பயன்படுத்தப்படும். அதிநவீன வசதிகள் கொண்ட 352 புதிய ஈசலான் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தபட்டன. இந்திய அளவில் யாரேனும் போக்குவரத்து விதிகளை மீறியிருந்தாலோ அதற்கான அபராதம் செலுத்தாமல் இருந்தாலோ இந்த இயந்திரம் கண்டுபிடித்துவிடும். போக்குவரத்து காவலர்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்கும் வகையில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.