கிராமப்பகுதிக்குள் நுழைந்த யானைக் கூட்டம்! ஓசூர் அருகே இரண்டாவது நாளாக ‘திக்.. திக்..!”

ஓசூர் அருகே கிராம பகுதிகளில், இரண்டாவது நாளாக 13 காட்டு யானைகள் நுழைந்து அப்பகுதியினரை பீதிக்குள்ளாக்கின. தீவிர முயற்சிக்கு பிறகு, அவை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானமாவு வனப்பகுதியில் 20 காட்டுயானைகள் சுற்றிவந்தன. அவற்றில் இருந்து பிரிந்த 13 காட்டுயானைகள், ஒரு குழுவாக ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடி ஏரியின் அருகே முகாமிட்டிருந்தன.

 

யானைகளை விரட்டும் பணியால் சாலையில் காத்திருந்த வாகனங்கள்

 

நேற்று மாலை வனத்துறையினர் யானைகளை விரட்ட முயன்றபோதும், அவை அருகே உள்ள காரப்பள்ளி, சோமநாதபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளிலேயே சுற்றி வந்தன. இன்று காலை, யானைகள் காரப்பள்ளி பகுதியில் இருந்து செந்தில்நகர் வழியாக, தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள வெங்கடேசப்பா என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் தஞ்சமடைந்திருந்தன.

 

இன்று, தொரப்பள்ளி அருகே உள்ள சானமாவு காட்டுபகுதிக்குள், 13 காட்டுயானைகளை, 20க்கும் மேற்ப்பட்ட வன ஊழியர்கள் போராடி விரட்டியடித்துள்ளனர். இன்று மாலைக்குள், அடர்வனப்பகுதியான தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டிற்கு அவற்றை விரட்ட திட்டமிட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சானமாவு வனப்பகுதிக்குள் யானைகள் விரட்டப்பட்டிருப்பதால், சுற்றியுள்ள பாத்தக்கோட்டா, போடூர், ஆழியாளம், இராமாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் ஆடு,மாடு மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்; இரவு நேர பயணங்களை தவிர்த்து, வீடுகளின் முன்பக்க ஒளி விளக்குகளை தொடர்ந்து எறிய விடவேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


Leave a Reply