கோட்சே ஒரு தேசபக்தர் என்று பிரக்யா சிங் கருத்து! பாரதிய ஜனதா கடும் கண்டனம்

“நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் தீவிரவாதி கிடையாது” என பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான பிரக்யா சிங் கூறியுள்ளார்; இதற்கு, அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

 

அரவக்குறிச்சி தொகுதியில், சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலஹாசனுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரான பிரக்யா சிங், இன்று பேட்டி அளித்தார். அதில், “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் எப்பொழுதும் தேசபக்தராகவே இருப்பார். நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என்று கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும்” என்றார்.

 

கமலஹாசனின் கருத்துக்கு பதில் என்ற பெயரில், பிரக்யா சிங் தெரிவித்த கருத்து, பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, இது கட்சியில் கருத்தல்ல என்றும் தெரிவித்துள்ளது.

கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.


Leave a Reply