இந்து தீவிரவாதி என்று கூறிய விவகாரத்தில் முன் ஜாமின் கேட்டு கமலஹாசன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது, உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது.
அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் பேசியபோது, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நேற்று மாலை கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் கேட்டு, அவர் தரப்பு வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
கமலஹாசன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை. அவர் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்க ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என கமல்ஹாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
கமல்ஹாசனுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் பேசிய வீடியோ பதிவு, வழக்கு விசாரணையில் போது நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா? சர்ச்சைக்குரிய கருத்துக்கள் விவாதங்களுக்கு உள்ளாகும் போது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தேர்தல் முடியும் வரை சர்ச்சை கருத்தை ஊடகங்கள், அரசியல் கட்சியினர் விவாதிக்க வேண்டாம் என நீதிபதிகள் அறிவுறித்தினர்.
மேலும், கமல்ஹாசன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.