சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற ‘குற்றம் குற்றமே’ இதழ் நிருபரிடம், தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன் கண்டிப்பு காட்டி, பிறகு மழுப்பலாக நடந்து கொண்டார்.
கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக, தேர்தல் பார்வையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனின் தலைமையில் நடைபெற்றது.
இதில், மேலிட பார்வையாளர் அருண் குமார், மேலிட செலவின பார்வையாளர் உன்னி கிருஷ்ணன், உதவி செலவினப்பார்வையாளர் ரவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பங்கேற்று, தேர்தல் பறக்கும் படையினர், நிலைக்கண்காணிப்புக்குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்.பி.சுஜித் குமார், இத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக, 18 பறக்கும் படையினர், 33 சோதனைச்சாவடிகள், 25 நிரந்தர சோதனைச்சாவடிகளை அமைத்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இடைத்தேர்தல், எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் அமைதியாக நடக்கும் என்று, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நிருபரிடம் மழுப்பிய ஆர்.ஓ.!
இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற நமது ‘குற்றம் குற்றமே’ இதழ் நிருபரிடம், எந்த மீடியா நீங்க? லோக்கல் மீடியாவா என்று, தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் கண்டிப்புடன் கேட்டார்.
அதற்கு நிருபரோ, ‘குற்றம் குற்றமே’ வார இதழ் மற்றும் இணையதளத்திற்கான செய்தியாளர் என்று கூறியதோடு, இன்று வெளியான கலெக்டர் குறித்த செய்தி உள்ளிட்டவைற்றையும் காண்பித்துள்ளார்.
அதை பார்த்த பிறகு, லோக்கல் அதாவது கோயம்புத்தூரில் இருந்து வரும் இதழா என்ற அர்த்தத்தில் கேட்டதாக மழுப்பலாக பதிலளித்து நழுவினார்.