காசிக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது, இந்துக்கள் பலரின் எண்ணமாகும். காசிக்கு செல்ல முடியவில்லையே என்ற கவலையில் இருப்பவர்கள், புதுச்சேரி அருகே உள்ள திருக்காஞ்சி கிராமத்தில் வீற்றிருக்கும், காசியை மிஞ்சும் ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரரை தரிசித்து வரலாம்.
கங்கை கரை ஓரத்தில் அமர்ந்து காசி விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது போலவே, ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்ற நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த நதியானது, கங்கைக்கு நிகராக போற்றப்படுகிறது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு.
இங்குள்ள சுவாமியை மனமுருகி வேண்டினால், பதினாறு செல்வங்களும் ஒருசேர கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு அகலும் என்ற நம்பிக்கையும் உண்டு. இந்த திருத்தலத்தில் சித்தர்களின் சமாதிகள் பல இருப்பதாக குறிப்புகள் உள்ளன.
இக்கோவிலானது, காசிக்கு நிகராக போற்றப்படுவதற்கு பின் ஒரு புராண காலத்து கதை உள்ளது. ஒருமுறை, வேத விற்பன்னர் ஒருவர் தன்னுடைய தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்க புறப்பட்டு சென்றுள்ளார்.
போகும் வழியில் இங்குள்ள இறைவனை தரிசிக்க விரும்பினார். இங்கு வந்ததும் தனது தந்தையின் அஸ்தி முழுவதும் பூக்களாய் மாறியதை கண்டு மெய் சிலிர்த்துள்ளார். அஸ்தியை பூக்களாக மாற்றும் சக்தி இந்த தலத்திற்கு இருப்பதால், இது காசியை மிஞ்சும் ஷேத்ரம் என்பதை அவர் உணர்ந்தார். அப்போது, காசியில் செய்வேண்டிய பிதுர் கர்மாக்களை இங்கும் செய்யலாம் என்றொரு அசரீரி கேட்டுள்ளது.
இங்குள்ள சிவலிங்கம், 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்துள்ளார் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது. மூலவர் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார். காமாட்சி மீனாட்சி வீற்றிருக்கின்றனர். கருவறையானது தஞ்சை பெரிய கோவிலின் கருவறை போலவே இருக்கிறது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி சரிவர கொடுக்க முடியவில்லையே என்ற கவலையில் இருப்பவர்கள், இந்த ஆலயத்திற்கு சென்று, பரிகாரம் தேடிக் கொள்ளலாம்; அதன் பிறகு பித்ருக்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்து சுபீட்ஷம் பெறலாம்.
புதுச்சேரி – விழுப்புரம் சாலையில், வில்லியனூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்காஞ்சி. வில்லியனூரில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.