--- --:--:-- --

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் ஒதுக்குவது தொடர்பாக விரைவில் டெண்டர்!

5

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக்கோரி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் தாக்கல் செய்த மனு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் நடராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றி 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்காக சங்கத்தின் சார்பில் பட்டாசு விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார்.

 

பட்டாசு விற்பனைக்கு தங்களது சங்கத்துக்கு இடம் ஒதுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த ஆண்டு தங்களுக்கு தீவுத் திடலில் இடம் ஒதுக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. தீவுத் திடலை தற்போது பேருந்து நிலையமாக பயன்படுத்தி வருவதால் பட்டாசு கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனைக்காக தங்களுக்கு இடம் ஒதுக்கக்கோரி, கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு அனுப்பப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.விஜய் ஆனந்த், பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக்கோரி ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆண்டு பட்டாசு கடைகள் ஒதுக்குவது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் வாதிட்டார்.

அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தாண்டு பட்டாசு விற்பனைக்கு கடைகள் ஒதுக்குவது தொடர்பாக விரைவில் டெண்டர் விடப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, மனு குறித்து சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் பொது மேலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அக்டோபர் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon