சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் ஞாயிற்றுக்கிழமை முதல் உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 30 நிமிடங்களுக்கு ரூ.35 வரையிலும், 24 மணி நேரப் பார்க்கிங்கிற்கு ரூ.110 வரையிலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2024-ல் பார்க்கிங் கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், ஒப்பந்த விதிமுறைகளின்படி பார்க்கிங் கட்டணத்தில் 5% உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
கார்களுக்கு முதல் 30 நிமிடங்களுக்கு ரூ.85 முதல் ரூ.90 வரையும் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ரூ.110-லிருந்து ரூ.115 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படும் கார்களுக்கு இனி ரூ.360-க்கு பதிலாக ரூ.380 வசூலிக்கப்படும்.
வேன்களுக்கு முதல் 30 நிமிடங்களுக்கு ரூ.345 கட்டணமாகவும், 24 மணி நேரத்திற்கு ரூ.1,155 வரையிலும் வசூலிக்கப்படும். 16 இருக்கைகள் கொண்ட பெரிய வாகனங்களுக்கு முதல் 30 நிமிடங்களுக்கு ரூ.695-ம், 24 மணி நேரத்திற்கு ரூ. 2,315 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை; அவை பெரும்பாலும் பழைய கட்டணத்திலேயே தொடரும். பார்க்கிங் சீட்டை தவறவிடுபவர்கள் பார்க்கிங் கட்டணத்துடன் சேர்த்து கார்களுக்கு ரூ.580 மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.175 அபராதமாக செலுத்த வேண்டும். பயணிகளை ஏற்றிச் செல்ல வரும் டாக்சிகள் வழக்கம்போல் நுழைவுக் கட்டணமாக ரூ.45 தொடர்ந்து செலுத்தும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




