ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுக்கு அபராதம்!
சென்னையில் ஒரே நாளில் விதிமீறலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகளவில் விதிமீறலில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. கே.கே. நகர், சோழிங்கநல்லூர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துக் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
காக்கி சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டியவர்களுக்கு 500 ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஆட்டோக்களின் பக்கவாட்டுக் கண்ணாடிகளை விதிகளுக்கு மாறாக உள்ளே பொருத்தியிருந்த ஓட்டுநர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டுநர் இருக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தால் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓட்டுநர் தனியாக அமர்ந்திருந்தாலும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட இருக்கையின் அகலம் அதிகமாக இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆட்டோக்களில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




