இனியாவது பயிர்க்காப்பீடு தொகையை கொடுங்க! கண்ணீருடன் விவசாயிகள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை!!

பயிர்க்காப்பீடு தொகை வழங்கக்கோரி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா சிறுவயல் ஊராட்சி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். தங்களுக்கு இன்னமும் பயிர்க்காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்று , வேதனையோடு அவர்கள் குறிப்பிட்டனர்.

 

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவயல், கிழக்கு குடியிருப்பு, நடுக்குடியிருப்பு, கடம்பூர், மஞ்சக்குளம், மேற்கு குடியிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 2017–18ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

 

கொடிக்குளம் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேட்டபோது, எங்களுக்கு இழப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றனர். கடன் வாங்கி விவசாயம் செய்து மழையின்றி விவசாயம் பொய்த்து போனதால் வாங்கிய கடனை, பயிர் இழப்பீட்டு தொகை வந்ததும் அடைத்துவிடலாம் என்று காத்திருந்தோம்.

 

தற்போது இழப்பீட்டு தொகை வழங்காததது வேதனை அளிக்கிறது. கடனை அடைக்க வழிதெரியாமல் திகைத்து வருகிறோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுபட்ட எங்கள் பகுதியை சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கூறினர்.

 

இதேபோல கமுதி அருகே உள்ள கே.வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரளாக வந்து மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் ஒரு விவசாயிக்கு கூட கடந்த 2017–18ஆம் ஆண்டிற்கான பயிர் இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. கந்து வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்திருப்பதால் இழப்பீட்டு தொகை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

 

மழையும் எங்களை கைவிட்டுவிட்டது. அரசும் இழப்பீட்டு தொகை வழங்காமல் கைவிட்டு விட்டது. இனி வாழ வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களின் நிலையை உணர்ந்து பயிர் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Leave a Reply