‘நீட்’ தேர்வு எழுதி வந்த மாணவி திடீர் மரணம்! தேர்வு கெடுபிடிகளே காரணம் என உறவினர்கள் புகார்!!

மதுரை சென்று நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பும் வழியில் மாணவி உயிரிழந்தார். தேர்வு கெடுபிடிகளால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

 

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை அடுத்த பாப்பனம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி; விவசாயி. அவரது மகள் சந்தியா (வயது 17), மாற்றுத்திறனாளி. இவர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் கொண்டு, நேற்று முன்தினம் மதுரைக்கு வந்து ‘நீட்’ தேர்வு எழுதினார்.

 

இறந்த மாணவி சந்தியா

 

அதன் பின், அவரது தந்தை முனியசாமியும் அரசு பஸ்சில் கமுதிக்கு, சந்தியா திரும்பிக் கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வந்து கொண்டிருந்த போது மாணவி சந்தியா, பஸ்சில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இச்சம்பவம் குறித்து மாணவியின் தந்தை முனியசாமி, திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சந்தியாவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, கமுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அவரது உறவினர்கள், சந்தியாவின் உடலை அடக்கம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தகவல் அறிந்ததும் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராமர், கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம், தாசில்தார் கல்யாணகுமார், இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்–இன்ஸ்பெக்டர்கள் முருகன், கண்ணன் ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

அப்போது ‘நீட்’ தேர்வின் போது, கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதன் காரணமாகவே மாணவி சந்தியா சரியாக சாப்பிடாமல் பட்டினியுடன் தேர்வு எழுதினார். அதனால் ஏற்பட்ட சோர்வில் மயக்கம் அடைந்து இறந்து போனதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இழப்பீடு வழங்கக் கோரினர்.

 

இதுகுறித்து கோரிக்கை மனு அளித்தால், கலெக்டரிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் சமாதானம் அடைந்தனர்.


Leave a Reply