ஸ்டாலின் சுதந்திரமாக நடமாட முடிந்தது என்றால், அதுவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு சாட்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, மதுரை ஐராவதநல்லூர். பெருங்குடி, அவனியாபுரம் ஆகிய இடங்களில், ரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
முதல்வராக நான் பொறுப்பேற்ற கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 35,000-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்துள்ளன. இதற்கு பின்புலமாக இருந்து செயல்பட்டவர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அனைத்து போராட்டங்களையும் சுமூகமான முறையிலே தீர்த்துவைத்து வெற்றிக் கண்டது இந்த அரசு.
உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தவில்லை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியை அதிமுக தொடங்கிய நிலையில் தி.மு.க.வினர் தான், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அதனால்தான் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது, 3 மாத காலத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம்.
தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி, அவரால் முழுமையாக செயல்படாத நிலையில் கூட தனது தலைவர் பதவியை யாருக்கும் வழங்கவில்லை. மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தான் இருந்தார். கருணாநிதியின் மறைவிற்கு பிறகுதான் தி.மு.க.வின் தலைவராக ஸ்டாலினால் முடிந்தது. பெற்ற தந்தையே இவரை நம்பாதபோது, தமிழ்நாட்டு மக்கள் எப்படி இவர்மீது நம்பிக்கை வைப்பார்கள்.
தி.மு.க.என்றாலே அராஜகம் தான். அழகு நிலையத்தில் பெண்கள் மீது தாக்குதல், பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு, செல்போன் வாங்கிவிட்டு பணம் தராமல் தகராறு செய்வது போன்ற பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டது தி.மு.க.வினர் தான்.
பிரச்சாரத்தின் போது வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்திக்கின்ற அளவுக்கு, ஸ்டாலின் சுதந்திரமாக நடமாட முடிந்தது என்றால், அதுவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு சாட்சி என்று, எடப்பாடி பழனிசாமி பேசினார்.