வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை ! வரும் 27 தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால், வரும் 27ஆம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

வங்கக் கடலில் வரும் 26 ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால், தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறுகையில், இலங்கையின் தென்கிழக்கே வரும் 26 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வலுவடைந்து, இலங்கையை தாண்டி மன்னார் வளைகுடா வழியாக தென்னிந்திய பகுதியில் கடந்த செல்ல வாய்ப்பு இருக்கிறது.

 

எனவே, வரும் 27ஆம் தேதி, தென் தமிழகம் மற்றும் மத்திய தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் இன்றும் நாளையும், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.

 

காஞ்சிபுரத்தில் ஆலங்கட்டி மழை

 

இதற்கிடையே, இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், வாழப்பாடி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

கனமழையால் காஞ்சிபுரம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

அதேபோல் திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று பிற்பகல் மழை பெய்து, கோடை உஷ்ணத்தை தணித்துள்ளது.


Leave a Reply