--- --:--:-- --

”சாய்பாபா பிறந்த இடம் எது..? உத்தவ் தாக்கரே அறிவிப்பால் எழுந்த சர்ச்சை..! ஷீரடியில் காலவரையற்ற பந்த்!!

5

சாய்பாபா பிறந்த இடம் குறித்து ஷீரடிக்குப் பதிலாக பத்ரி என்று வேறொரு இடத்தை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது. உத்தவ் தாக்கரேவின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஷீரடி பகுதியைச் சேர்ந்த மக்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை (பந்த்) தொடங்கியுள்ளனர். இதனால் ஷீரடி சாய்பாபா கோயிலும் மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் மகான் சாய் பாபாவின் சமாதி அமைந்துள்ளது. ஷீரடியில் தான் சாய் பாபா பல காலம் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்ததால் அவருக்கு அங்கு கோயிலும் கட்டப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதில் முக்கியத் தலைவர்களும் அடங்குவர்.

 

சாய்பாபா ஷீரடியில் தான் வாழ்ந்து மறைந்தார் என்றாலும் அவர் பிறந்த இடம் எது? என்பது தொடர்பான சர்ச்சை பல காலமாகவே நீடிக்கிறது. சாய்பாபாவும் தாம் வாழ்ந்த காலத்தில் தமது பிறப்பிடம் குறித்து எதுவும் தெரிவிக்காததும் இதற்கு காரணம். பர் பானி மாவட்டத்தில் உள்ள பத்ரி என்ற இடத்தில் தான் சாய் பாபா பிறந்தார் என அப்பகுதிவாசிகள் பல காலமாக உரிமை கொண்டாடி வருகின்றனர். இதற்கு மகாராஷ்டிர அரசியல் கட்சிகளிலும் எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது. ஆனால் ஷீரடி பகுதி மக்களோ, சாய்பாபா பிறந்தது தங்கள் ஊரில் தான் என கூறி வருகின்றனர்.

 

இந்நிலையில் தான் மகாராஷ்டிராவில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது சர்ச்சையாகியுள்ளது. சாய் பாபா பிறந்த இடம் பத்ரி என்றும், அந்த ஊரின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படுவதாகவும் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். பத்ரியிலும் சாய் பாபா கோயில் அமைந்துள்ள நிலையில், அங்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இதனாலேயே ரூ.100 கோடி செலவில் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உத்தவ் தாக்கரே கூறியதால் சீரடி கோயில் மூடப்படுமோ? என அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்தது. திடீரென சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சையை சிவசேனா கூட்டணி அரசு கிளப்புவதாகவும், சாய்பாபா பிறந்த இடம் குறித்து எந்த ஒரு அரசியல் கட்சிகளும் தீர்மானிக்க முடியாது என பாஜக எம்.பி சுஜய் பாட்டீல் தெரிவித்துள்ளார். மேலும் சட்ட ரீதியில் இதை எதிர்கொள்ளப் போவதாகவும், சாய்பாபாவின் ஜென்ம பூமியை விட கர்ம பூமி தான் முக்கியமானது என அவர் தெரிவித்தார்.

 

இதற்கிடையே முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அறிவிப்புக்கு எதிராக ஷீரடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். ஆனாலும் சாய்பாபா கோயில் திறந்திருக்கும் என்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டாலும் பக்தர்களுக்கு இடையூறு இருக்காத வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகமும் அறிவித்துள்ளது.

 

சாய்பாபா பிறந்த இடம் எது? என திடீரென சர்ச்சை எழுந்துள்ளது சாய்பாபா பக்தர்களையும் கவலையடையச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியில் ஆதரவும் எதிர்ப்பும் என இரு வேறு கருத்துகள் எழுந்துள்ளதால் மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon