விசாரணைக்கு ஆஜராக முடியாது : சீமான்
நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் விசாரணை நடந்துவருகிறது. இதில், சீமானை இன்று (27ம் தேதி) நேரில் ஆஜராகக் கூறி வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை.
இதன் காரணமாக அவருக்கு மீண்டும் சம்மன் வழங்க காவல்துறையினர் சென்றபோது அவர் வீட்டில் இல்லாததால், அவரது வீட்டில் சம்மனை ஒட்டினர். இது சில நொடிகளிலேயே சீமான் வீட்டுப் பாதுகாவலரால் கிழிக்கப்பட்டது.
அந்தப் பாதுகாவலரை கைது செய்ய காவல்துறையினர் முற்பட்டபோது அங்கு தள்ளுமுள்ளும், பாதுகாவலர், காவல்துறையினரை நோக்கி தனது துப்பாக்கி நீட்டியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஓசூரில் கட்சிக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியேவந்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதில் அளித்த அவர், “எனக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியபோது நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே வரமுடியாது, நிகழ்ச்சிகள் முடிந்ததும் வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறேன். தினமும் செய்தியாளர்களைச் சந்தித்துவருகிறேன். எனவே இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் எங்கு இருக்கிறது.இந்த அரசு இதேபோல் வேறு எதிலாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா பாருங்கள்.
நான் இங்கு நிகழ்ச்சியில் இருப்பது இங்கு பாதுகாப்பில் இருக்கும் காவலர்களுக்கும், அங்கு இருக்கும் காவலர்களுக்கும் தெரியும். இருந்தும் ஏன் என் வீட்டில் சம்மன் ஒட்ட வேண்டும். அதனால், அங்கு இருந்த என் தம்பி ஒருவர் அதனைக் கிழித்துவிட்டார். நான் தான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேனே, பிறகு ஏன் இந்த வேலை செய்கிறீர்கள்.நாளை 11 மணிக்கு வந்தாக வேண்டும் என்று சொல்கிறார்கள்.
என்னால் வரமுடியாது, என்ன செய்யமுடியும். என்னை எதுவும் செய்யமுடியாது.திமுக ஆட்சிக்கு வரும்போது மட்டும் தான் இந்த விவகாரம் வெளியே வரும். குறிப்பாக என்னைச் சமாளிக்க முடியவில்லை என்றால் அந்தப் பெண்ணை அழைத்து வருவார்கள்.
நான் தான் நீதிமன்றத்தில் இந்தப் புகாரை நிராகரிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தேன். அங்கிருந்த நீதிமான், இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு தருகிறார். விசாரணை நடத்திவிட்டுத் தானே தீர்ப்பு எழுத வேண்டும். அதைவிட்டு, இதுவெல்லாம் நடந்திருக்கும் எனக் கூறிவிட்டுத் தீர்ப்பு எழுதினால் விசாரணை எப்படி நடக்கும்” எனத் தெரிவித்தார்.





