அண்ணாமலை இயக்கம் : தீவிரமாக நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை
பா.ஜ.க முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த அண்ணாமலை அந்த கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சி மேலிடத்திற்கு கடிதம் வழங்கினார். அதைத் தொடர்ந்து கட்சி மேலிடம் அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், கடந்த 5-ஆம் தேதி அண்ணாமலை ‘வீ தி லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார். அதோடு, கட்சியில் இணைய விரும்புபவர்கள் https://wetheleader.org/ என்ற இணையதளம் மூலம் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.
அண்ணாமலையின் கட்சியில் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர். இதில், பா.ஜ.க உறுப்பினர்கள் பலரும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதுவரை அண்ணாமலை கட்சியில் 16 லட்சத்து 3 ஆயிரத்து 500 பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உறுப்பினர்கள் சேர்க்கையை மேலும் அதிகரிக்கச் சிறப்பு முகாம்களை அவரது ஆதரவாளர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணாமலை தனது இயக்கத்திற்கு மேடை பேச்சாளர்களை உருவாக்குவதற்காக 3 நாட்களுக்கு பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த முகாம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ஜூன் 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






