தண்டையார் பேட்டை மண்டலத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் முக்கிய குழாய் இணைப்புப் பணிகள் காரணமாக, சில பகுதிகளில் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய் கிழமை இரவு வரை தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தண்டையார் பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கத்திவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஜே.ஜே நகர் ஏ1 தெரு சந்திப்பில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் மண்டலம் 4-க்கு உட்பட்ட எழில் நகர், எம்.ஜி.ஆர் நகர், பாரதி நகர், காமராஜர் நகர் மற்றும் அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் தண்ணீர் ஜூன் 8 -ஆம் தேதி மாலை 5 மணி முதல் ஜூன் 9 -ஆம் தேதி இரவு 8 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பராமரிப்புக் காலத்தில் படேல் நகர் நீர் விநியோக நிலையமும் செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். குடியிருப்பாளர்கள், மெட்ரோவாட்டர் இணையதளத்தில் உள்ள வாரியத்தின் ‘டயல் ஃபார் வாட்டர்’ சேவை மூலம் டேங்கர் தண்ணீரை முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






