12 இடங்களுக்காகக் காத்திருக்கும் த.வெ.க..!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணிகளுடனும், நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்தும் களம் கண்டன. தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 85.10 சதவீத வாக்குகள் இந்தத் தேர்தலில் பதிவாகின.
நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலிருந்தே த.வெ.க. வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தனர். இறுதி முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணி 74 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் பெற்றுள்ளன.
தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், த.வெ.க.விற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு த.வெ.க. தலைவர் விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், இரண்டு வாரங்களுக்குள் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது த.வெ.க. ஆட்சி அமைக்க கூடுதலாக 12 இடங்கள் தேவைப்படுகின்றன. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆளுநரின் அழைப்பை ஏற்று விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றால், தமிழகத்தில் அமையும் முதல் கூட்டணி ஆட்சி இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநரின் அடுத்தகட்ட பதிலுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.





