தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான டெண்டர் ரத்து..!
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகளை தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனம், தனது திட்ட மேம்பாட்டு மானிய நிதியின் கீழ், கடந்த 20-ஆம் தேதி நாளிதழ்களில் டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதன்படி, சென்னை தவிர்த்து 12 மாநகராட்சிப் பகுதிகளை 3 பிரிவுகளாகப் பிரித்து, அங்குள்ள திடக்கழிவுகளைச் சேகரித்து, கொண்டு செல்லும் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய டெண்டர் கோரி இருந்தது. இந்த டெண்டர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து வரும் 30-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தனியார் பங்களிப்பு முறையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.





