--- --:--:-- --

டிரம்ப் வருகையால் களைகட்டும் அகமதாபாத்!

4

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வருகையையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது குடும்பத்துடன் இரண்டு நாட்கள் பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார். குஜராத் மற்றும் டெல்லியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

 

அகமதாபாத் விமான நிலையம் முதல், டிரம்ப் செல்லும் வழி நெடுகிலும் அவரை வரவேற்கும் வகையில் வாசகங்கள், ஓவியங்கள் போன்றவை மாணவர்களால் வரையப்பட்டு வருகின்றன. மேலும் அமிர்தசரசை சேர்ந்த பிரபல ஓவியர் டிரம்ப்பை வரவேற்க அவரது ஓவியத்தை சித்திரமாக சாலையோரம் வரைந்து அழகுபடுத்தி வருகிறார்.

 

சாலை வழியாக 22 கிலோமீட்டர் தூரம் டிரம்ப் வாகனத்தில் பயணம் செய்கிறார். இதனால் அவர் செல்லும் பாதையில் 28 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கலை நிகழ்ச்சியில் நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது திறமைகளை பறை சாற்றுகின்றனர்.

 

அதன்பின் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரையாற்றுகிறார். சுமார் ஒரு லட்சம் பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சுமார் 10,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் பாடகரான கைலாஷ் மற்றும் குஜராத்தி பாடகர்களான கீர்த்திதன் காதவி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை டோனல்டு டிரம்ப் நாகரி அபிநந்தன் கமிட்டி என்ற குழு ஏற்பாடு செய்துள்ளது.

 

அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு அகமதாபாத்திலிருந்து தனது காதல் மனைவியுடன் ஆக்ரா செல்லும் டிரம்ப் தாஜ்மஹாலை பார்வையிடுகிறார். இதற்காக தாஜ்மகாலை சுற்றி உள்ள சாலைகளை அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து 25 ஆம் தேதி காலை குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு அரசு முறைப்படி முப்படைகளின் ராணுவ மரியாதையும் நடைபெற உள்ளது.

Leave a Reply

Right Menu Icon