--- --:--:-- --

திருப்பூர் யாருக்கு திருப்பத்தை தரும்? குற்றம் குற்றமே கள ஆய்வு சொல்வதென்ன? கடைசி நேர வியூகங்களால் முடிவு மாறுமா?

31

பின்னலாடை நகரான திருப்பூரின் வெற்றி, அரசியல் கட்சிகளுக்கு ஒரு திருப்புமுனையைத் தரும் என்ற சூழலில் இங்கு யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குற்றம் குற்றமே நடத்திய பிரத்யேக கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. இலை துளிர்க்குமா? கதிர் அரிவாளின் கை ஓங்குமா? அல்லது தாமரை மலருமா என்பதை இனி காண்போம்…

 

 

நாட்டின் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக விளங்கும் தொழில்களில் முதன்மையானது பின்னலாடைத்துறை. இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் அன்னியச் செலவாணியை ஈட்டித் தரும் திருப்பூரில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சனைகள் முழுமையாக தீர்ந்தபாடில்லை.

 

பின்னலாடைத் துறையினருக்கு தொடரும் நெருக்கடி, நகரில் நிலவும் பல்வேறு அடிப்படைத் தேவைகள், நொய்யலாறு பிரச்சனை, வட மாநிலத் தொழிலாளர் விவகரம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம், சட்டம் ஒழுங்கு என்று பல்வேறு பிரச்சனைகள் திருப்பூரில் நிலவுகின்றன.

 

இந்த சூழலில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் பொதுத்தேர்தலில் யாரை தேர்வு செய்வது? மக்களின் மன ஓட்டம் என்னவாக இருக்கிறது என்பதை அறிய குற்றம் குற்றமே தரப்பில் கள ஆய்வினை மேற்கொண்டோம். குற்றம் குற்றமே சிறப்பு நிருபர்கள் குழு, திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று மக்களை சந்தித்தது. அதை காணும் முன்பாக தொகுதி குறித்த சிறு அறிமுகத்தை பார்ப்போம்.

 

தொகுதி அறிமுகம்

 

திருப்பூர் மக்களவைத் தொகுதி, 2009 வரை கோபி பாராளுமன்றத் தொகுதியாக இருந்து வந்தது. பின்னர், திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியாக வரையறை செய்யப்பட்டது. இத்தொகுதியில் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. வாக்காளர்கள் எண்ணிக்கை 993,758 ஆகும்.

 

 

கடந்த 2019ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதி கடும் போட்டியை சந்தித்தது. சிபிஐ-வின் வேட்பாளர் சுப்பராயன் இந்த தேர்தலில் 5,08,725 வாக்குகளைப் பெற்று, 93,368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஆனந்தன், 4,15,357 (37.1 சதவீத வாக்குகள்) பெற்று இரண்டாமிடத்தை பெற்றார். மக்கள் நீதி மய்யத்தின் சந்திரகுமார் 64,657 (5.78%) , நாம் தமிழர் கட்சியின் ஜெகநாதன் 42,189 வாக்குகளை பெற்றனர்.

சூப்பராக செயல்படாத சுப்பராயன்…

 

திருப்பூர் தொகுதி மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயனே, இம்முறை மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். சிட்டிங் எம்.பி. என்பதால் தொகுதியில் நன்கு அறிமுகம் இருந்தாலும், தொகுதிக்கு என்ன செய்தார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழாமல் இல்லை.

 

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நன்றி அறிவிப்பு செய்யக்கூட தொகுதி பக்கம் வரவில்லை என்று சொல்லும் அளவுக்கு சுப்பராயனின் செயல்பாடுகள் சூப்பராக இல்லை என்பதே, நம்மிடம் பேசிய பலரும் ஆதங்கப்பட்டனர். மக்களை சரிவர சந்திக்க வில்லை; குறைகளை கேட்கவில்லை. அரசு விழாக்களில் மட்டுமே சுப்பராயனை பார்க்க முடிந்ததாக தொகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

கண்டா வரசொ சொல்லுங்க…!

 

வயதாகிவிட்டதால் இனி சுப்பராயனால் முன்பு போல் (?) வேகமாக செயல்பட முடியுமா? இதுவரை எம்.பி.யாக இருந்து மட்டும் என்ன பெரிதாக சாதித்துவிட்டார் என்று எதிர்த்தரப்பினர் பிரசாரம் செய்யும் அளவுக்கு இவரது செயல்பாடுகளில் பரவலாக அதிருப்தி நிலவுகிறது.

 

வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பே திருப்பூர் மக்களவை தொகுதியின் பல இடங்களில் “திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க” என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சுப்பராயன் தனது தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால் ரூ.1கோடி பரிசு என்ற போஸ்டர் மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் தொகுதியின் பல இடங்களில் ஒட்டப்பட்டன.

 

அந்தளவுக்கு சுப்பராயனின் மீது புகார்கள் உள்ள நிலையில், அவரையே மீண்டும் நிறுத்தி இருப்பது, திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வாய்ப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.

 

ஆக்ரோஷ அதிமுக!

 

திருப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் பெருந்துறையை சேர்ந்த அருணாசலம் நிறுத்தப்பட்டுள்ளார். பவானி, பெருந்துறை, கோபி என்ற ஈரோடு மாவட்ட தொகுதிகள், திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் இருப்பதால், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு இம்முறை அதிமுக வாய்ப்பு தந்துள்ளது.

 

இயல்பாகவே பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர் போன்றவை அதிமுகவின் வலுவான கோட்டையாக உள்ளது. அந்தியூரில் திமுகவுக்கு சம அளவில் பலம் இருந்தாலும், வேட்பாளர் கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் வாக்குகள் அப்படியே போய்ச்சேருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

பவானி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கணிசமாக ஆதரவு இருந்தாலும், அது ஆக்ரோஷமாக களத்தில் தேர்தல் பணியை செய்து வரும் அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் அளவுக்கு இருக்காது என்பதே குற்றம் குற்றமே நிருபர்கள் குழு நேரில் ஆய்வு நடத்தியதில் தெரிய வருகிறது.

 

திருப்பூரை பொருத்தவரை தெற்கு தொகுதி திமுகவுக்கு சாதகம் என்ற போதும் வடக்கில் அதிமுகவின் கைகள் ஓங்கி இருப்பதால், அருணாச்சலத்திற்கு பிளஸ் ஆக உள்ளது.

 

தாமரை மலருமா? வாடுமா?

 

திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியின் இன்னொரு நட்சத்திர வேட்பாளர், பாஜக சார்பில் போட்டியிடும் முருகானந்தம். தொகுதி மக்களுக்கு பரிட்சையமானவர். எளிதாக மக்களை அணுகக்கூடியவர். மத்தியில் உள்ள ஆளுங்கட்சி என்பதால் தேர்தல் செலவுக்கு நிதி ஒருபிரச்சனை இல்லை என்பதெல்லாம் இவரது சாதகமான அம்சங்கள்.

 

பின்னலாடை நகரில் நிலவும் பிரச்சனைகளை படம் பிடித்துக் காட்டும் வகையில், பனியனுடன் பல இடங்களில் பிரசாரம் செய்து, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆனால், 10 ஆண்டுகளாக மத்தியில் உள்ளது உங்களது பாஜக அரசு தானே? பனியன் தொழில் பிரச்சனைக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

வட மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராக இருந்த அனுபவம் முருகானந்திற்கு உள்ளது என்றாலும், தமிழக மண்ணுக்கு அது எந்தளவு பொருத்தமாக இருக்கும் என்பது தெரிய வில்லை. அதுமட்டுமின்றி பெரிய அளவில் வலுவான கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடாதது, தொகுதியில் கணிசமாக இருக்கும் தேமுதிகவின் வாக்குகள் அதிமுக பக்கம் திரும்புவது போன்ற காரணங்களால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு என்பது கேள்விக்குறிதான் என்பது நமது கள ஆய்வுகளில் தெரிய வருகிறது.

நூலிழையில் வெற்றி வாய்ப்பு

 

எனவே, திருப்பூரை பொருத்தவரை பிரதான போட்டி அதிமுக- திமுக இடையேதான் நிலவுகிறது. இதில், சுப்பராயனை மீண்டும் நிறுத்தி பெருந்தவறு செய்துவிட்டதல, அது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. தற்போதைய கள நிலவரத்தின்படி பார்த்தால், திருப்பூரில் நூலிழையில் இலை துளிர்க்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எந்த கட்சி வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்காது என்றே தெரிகிறது.

 

அதே நேரம், அதிகாரமும் பண பலமும் கொண்ட திமுகவின் கடைசி நேர தேர்தல் வியூகங்கள், பிரசார முன்னெடுப்புகள் நூலிழையில் முந்தி நிற்கும் அதிமுகவின் வெற்றிக் கனியை தட்டிப் பறிக்குமா என்பது ஜூன் 4ஆம் தேதி தெரிய வந்துவிடும்.

 

Right Menu Icon