இருமல் மருந்து வாங்க மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு தேவையா..?
மாசுபட்ட இருமல் மருந்துகளைக் குடித்த குழந்தைகள் உயிரிழந்த தொடர் சம்பவங்களை அடுத்து, மத்திய அரசு இருமல் மருந்துகளை குறிப்பிட்ட சில உற்பத்தி மற்றும் விற்பனை விலக்கு பெறும் மருந்துகளின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இதன் மூலம், சிறிய கிராமங்களில் உள்ள பொதுப் அங்காடிகளில் (General Stores) இனி இருமல் மருந்துகளை விற்பனை செய்ய முடியாது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அரசிதழ் அறிவிப்பில், ‘மருந்து விதிகள்’ பிரிவின் ‘அட்டவணை K’ என்பதில் இருந்து சிரப் (திரவ மருந்து) என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பு வருவதற்கு முன்பே, இந்தியாவில் உள்ள பெரும்பாலான இருமல் மருந்து வடிவங்களுக்கு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு சட்டப் படி கட்டாயமாக இருந்தது. தற்போது ‘அட்டவணை K’ பிரிவில் இருந்து நீக்கப்பட்டதன் மூலம், 1,000-க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய கிராமங்களில் உள்ள பொதுப் அங்காடிகள் இருமல் மருந்துகளை விற்க வழங்கப்பட்டிருந்த ஒரே ஒரு சிறப்பு விதிவிலக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதர பகுதிகளில், இருமல் மருந்துகளை மருந்தாளுநர் (Pharmacist) முன்னிலையில், உரிமம் பெற்ற மருத்துவக் கடைகளில் (Pharmacy) மட்டுமே விற்பனை செய்ய முடியும்.
இருமல் மருந்துகளில் கலந்திருந்த அசுத்தங்கள் (Contaminants) காரணமாகப் பல குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா பகுதியில் 22 குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து, நாட்டின் உச்ச மருந்து ஒழுங்குமுறை அமைப்பான ‘மருந்து ஆலோசனைக் குழுவின்’ கூட்டத்தில் இந்த கண்காணிப்பு நடவடிக்கை குறித்து முதன்முதலில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், மருந்து ஒழுங்குமுறை நிபுணர்கள் இந்த நடவடிக்கையை மிகக் குறைவானது மற்றும் காலம் கடந்து எடுக்கப்பட்டது என்று விவரித்துள்ளனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் மருந்து ஒழுங்குமுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அட்டவணை H, X (பதிவுசெய்யப்பட்ட மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே விற்கப்பட வேண்டியவை) பிரிவின் கீழ் வராத இருமல் மருந்துகளுக்கு மட்டுமே இந்த விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் சந்தையில் உள்ள அனைத்து இருமல் மருந்துகளிலும் ஏதேனும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வீரியப் பொருள் கலந்தே இருக்கிறது. அதனால், அவை எப்போதுமே மருத்துவர் சீட்டு இல்லாமல் விற்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால், நடைமுறையில் இவை எங்கும் எளிதாகக் (Over the counter) கிடைக்கின்றன.
அவர் மேலும் கூறுகையில், எந்தவொரு கட்டுப்படுத்தப்பட்ட பொருளும் இல்லாத ஒரே இருமல் மருந்துகள் மூலிகை (Herbal) மருந்துகள் மட்டுமே. அவை இந்த விதிகளின் கீழ் வருவதில்லை. ஆனால், அவற்றில் சிலவற்றிலும் ‘புரோப்பிலீன் கிளைக்கால்’ (Propylene Glycol – PEG) கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது, இதுவே அசுத்தங்கள் கலப்பதற்கான முக்கியக் காரணமாக அமைகிறது என்றார்.
இருமல் மருந்து தயாரிப்பில் கரைப்பானாக பயன்படுத்தப்படும் ‘புரோப்பிலீன் கிளைக்கால்’ (PEG) தரத்தை முறையாக பரிசோதிக்காமல், மருத்துவத் தரமற்ற (Non-pharmaceutical grade) வேதிப்பொருளைப் பயன்படுத்தும்போது, அதில் ‘டைஎதிலீன் கிளைக்கால்’ (Diethylene Glycol) மற்றும் ‘எதிலீன் கிளைக்கால்’ (Ethylene Glycol) போன்ற நச்சு அசுத்தங்கள் கலந்துவிடுகின்றன.
மாசுபடுவதைத் தடுக்கச் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அசுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக உள்ள மாற்று கரைப்பான்களைப் பயன்படுத்துதல். இருமல் மருந்துகளுக்கு புரோப்பிலீன் கிளைக்கால் கரைப்பான் தேவைப்பட்டாலும், நிறுவனங்கள் அதே மருந்தை ‘சஸ்பென்ஷன்’ (கரையாத துகள்கள் கொண்ட திரவம்) வடிவில் புரோப்பிலீன் கிளைக்கால் பயன்படுத்தாமல் தயாரிக்கலாம். சிரப்கள் இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும், ஆனால் சஸ்பென்ஷன்களும் அதே அளவு சமமான செயல்திறனும் நிலைத்தன்மையும் கொண்டவை என்கிறார் ஒரு தொழில்துறை நிபுணர்.
சிறிய நிறுவனங்கள் பெரிய பேரல்களில் (Barrels) புரோப்பிலீன் கிளைக்கால்-ஐ வாங்குவதில்லை. அவர்கள் பொதுச் சந்தையிலிருந்து முத்திரை இல்லாத திறந்த கொள்கலன்களில் வாங்குகின்றனர். இதனால் அசுத்தம் எங்கு நிகழ்கிறது என்பதைக் கண்டறிய முடிவதில்லை. எனவே, சிறிய அளவிலான சீல்வைக்கப்பட்ட புரோப்பிலீன் கிளைக்கால் கொள்கலன்களை கிடைக்க செய்ய வேண்டும். சில நேரங்களில், விநியோகஸ்தர்கள் மலிவான தொழில்துறை தர புரோப்பிலீன் கிளைக்கால்-ஐ மருத்துவத் தரம் வாய்ந்தது என ஏமாற்றி விற்றுவிடுகின்றனர்.
அசுத்தங்கள் இருப்பதற்கான வாய்ப்புகளை குறைக்க, பொதுமக்கள் நன்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவப்பட்ட பிராண்டுகளின் இருமல் மருந்துகள் மட்டுமே வாங்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். டெல்லியின் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் உள் மருத்துவம் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறுகையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மக்கள் இருமல் மருந்து இல்லாமலேயே தானாகவே குணமடைந்து விடுவார்கள். இருமல் நீண்ட நாட்களாக இருக்கும்போது தொடர்ந்து இருமல் மருந்து உட்கொள்வது, அதன் பின்னணியில் இருக்கும் உண்மையான நோயறிதலைத் தவறவிட வழிவகுக்கும் என்கிறார்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் இருமலைக் கட்டுப்படுத்தும் (Cough Suppressant) மருந்துகளைப் பயன்படுத்தலாம். ஆனால் நெஞ்சில் சளி (Phlegm) தேங்கியிருந்தால், எந்தவொரு இருமல் மருந்தையும் பயன்படுத்தக் கூடாது. நெஞ்சில் இருக்கும் சளி இருமல் மூலம் வெளியே வர வேண்டுமே தவிர, நுரையீரலிலேயே தங்கிவிடக் கூடாது. ஆனால், சில இருமல் மருந்துகளில் உள்ள ஒவ்வாமை எதிர்ப்பு (Anti-allergic) மருந்துகள், சளியை நுரையீரலுக்குள்ளேயே வறண்டு போகச் செய்துவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.





