கொரோனாவை கட்டுப்படுத்தும் லட்சணம் இதுதானா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கீழக்கரை சம்பவம்..! பீதியில் உறைந்த 300 குடும்பங்கள்!!
கொரோனா.. கொரோனா.. என வெற்றுக் கூச்சல்தான் போடுகிறோமே தவிர உருப்படியாக தடுப்பு நடவடிக்கைகளை நாமும் , அரசாங்கமும் செய்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என்பதற்கு சிறந்த உதாரணமாக கீழக்கரை நபர் ஒருவரின் இறப்பின் மூலம் பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை, வேறு நோயால் இறந்ததாகக் கூறி உறவினர்களிடம் ஒப்படைத்து, ஊரே கூடி அடக்கமும் செய்த பின், இறந்து 3 நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பால் இறந்ததாக அறிவித்துள்ளது தமிழக சுகாதாரத் துறை. இதனால் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக இறந்தவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் போல் சுற்றி வளைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளதால் கீழக்கரையில் பெரும் பீதியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக நாடுகள் போர்க்குணத்துடன் பல்வேறு வகையில் முழு சக்தியையும் பயன்படுத்தி எதிர்கொள்ளும் நிலையை தொலைக்காட்சிகளில் கண்கூடாக கண்டுவருகிறோம். நம் நாட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு போட்டு ஒட்டுமொத்தமாக நாட்டை லாக் டவுன் செய்தாகி விட்டது.
ஆனால், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உரிய அக்கறை செலுத்தப்படுகிறதா? என்பதற்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், கீழக்கரையைச் சேர்ந்த நபர் ஒருவரின் இறப்பில் நடந்துகொண்ட விதம் மூலம் தமிழக சுகாதாரத் துறையின் லட்சணமே கேள்விக்குறியாக உள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த 71 வயதான இவர், சென்னை மண்ணடியில் தொழில் செய்து வந்தார். கடந்த மாதம் துபாய் சென்று விட்டு திரும்பி வந்துள்ளார். கொரோனா தொற்று பீதியால் வீட்டிலேயே தம்மை தனிமைப்படுத்தி வந்துள்ளார். திடீரென்று தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 2-ந் தேதி காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சையின் போது கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அன்று மாலையே அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கொரோனா தொற்றால் இறந்தாரா? என்பதற்கான சோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே, வேறு நோயால் இறந்ததாகக் கூறி அவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் .

இதனையடுத்து, அவரது உடல், சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்டு மறுநாள் (ஏப் 3-ந் தேதி) அடக்கம் செய்யப்பட்டது. இந்த உடல் அடக்கத்தின்போது அவரது உறவினர்கள் அழுது புரண்டு கதறியுள்ளனர். முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் எம் எல் ஏ வுமான மணிகண்டன், முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோரும் உடல் அடக்கத்தில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், அவர் இறப்பதற்கு முன்பு அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு கொரானா தொற்று நோய் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இன்று தெரியப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அவரது உடல் அடக்கத்திற்கு சென்ற 300 – க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சோதனை செய்ய கிராம நிர்வாக அலுவலர் மூலம் போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதி முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அபாயத்தின் பிடியில் நாடே சிக்குண்டு பரிதவித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று உயிரிழந்தவரை சாதாரண நோயால் இறந்ததாகக் கூறி உடலையும் உறவினர்களிடம் ஒப்படைத்தது ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக அமைந்துள்ளது என ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்தொற்று முடிவு அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தாலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியத்தாலும் தற்போது பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. கடந்த மாதம் துபாயிலிருந்து வந்த கீழக்கரையை சேர்ந்த சென்னையில் வசிக்கும் 70 வயதுடைய நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது வீட்டில் அரசு சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 2 அன்று காலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் வருவதற்கு முன்பே அன்று மாலையே அவர் உயிரிழந்துவிட்டார். ஆனால் நேற்று இரவு வரை முடிவுகள் வராதது மிகப்பெரிய கால தாமதம். அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற அறிவிப்பை அரசு காலதாமதமாக இன்று வெளியிட்டிருக்கிறது.
சந்தேகிக்கப்பட்டு பரிசோதனையில் இருக்கும் ஒருவர் இறந்தநிலையில் முடிவு வருவதற்கு முன்பே, உடல்நலக்குறை வால் உயிரிழந்து விட்டதாக கூறி உடலை ஒப்படைத்தது மருத்துவமனை நிர்வாகம் செய்த மிகப் பெரிய தவறு. தற்போது நோய்தொற்று உறுதியாகி உள்ள சூழ்நிலையில் அவரது இறுதிசடங்கில் உடல்நலக்குறைவால் இறந்தவர் என்று எதார்த்தமாக
பங்கேற்ற அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால் அனைவரும் தற்போது பெரும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த முடிவினை உடனடியாக அறிவித்திருந்தால் இது போன்ற அச்சம் ஏற்பட்டிருக்காது. அல்லது முடிவு வர தாமதமாகும் பட்சத்தில் இறந்தவர்களின் உடலை பாதுகாத்து முடிவு வந்ததற்கு பிறகு ஒப்படைத்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். இறுதி அஞ்சலியில் பங்கேற்பதை அனைவ ரும் தவிர்த்து இருப்பார்கள். அதனை செய்யாமல், மிகுந்த அலட்சியப்போக்குடன் இந்த பேரிடர் காலகட்டத்தில் மெத்தனமாக செயல்பட்ட ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் பெரும் தவறை நிகழ்த்தி விட்டது.
கொரோனா நோய்தொற்று விஷயத்தில் உலகம் முழுவதும் அச்சத்தில் இருக்கும் பொழுது மெத்தனப் போக்குடன் செயல்படும் ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் தொற்று பரிசோதனை முடிவு களை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும். பொதுவாக இந்த பரிசோதனைகளில் போதுமான வெளிப்படைத்தன்மை இல்லை என பொதுமக்கள் அச்சம் கொள்கின்றார்கள்.

கொரோனா நோய்தொற்று பரிசோதனையில் காலதாமதத்தை தவிர்த்து, வெளிப்ப டைத்தன்மையுடன் அரசு நடந்து கொள்ள வேண்டும். பரிசோதனையின்போது அந்தநபர் இறந்துவிட்டால் முடிவுகளை உடனடியாக அறிவித்த பின்பே அவரது உடலை ஒப்படைக்க வேண்டும். இது மிகப்பெரிய அலட்சியம். இந்த அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் இதற்காக நாம் பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என நவாஸ் கனி எம்.பி., தெரிவித்துள்ளார்.






