திருப்பூர் : சடலத்தை ஒப்படைத்துவிட்டு திரும்பிய ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு நேர்ந்த சோகம்
பீகாருக்கு பிரேதம் ஏற்றி சென்றவர் அதே ஆம்புலன்சில் பிரேதமாக வந்தார் குளத்தில் குளித்த போது மூச்சு திணறி இறந்தார்.
திருப்பூர் அடுத்துள்ள மங்கலம், லோட்டஸ் கார்டனில் உள்ள உப்புத்தோட்டம், ஜக்கரியா காம்பவுண்டில் வசித்து வந்தவர் வடை வியாபாரி முபாரக் இவரது மகன் அபுதாகிர் (வயது 38). இவர் பெருமாநல்லூரில் உள்ள அன்னை ஆம்புலன்ஸில் கடந்த 7 வருடங்களாக டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி சைபுனா. இவரது மகன் முஹம்மது அப்சல். இவர் மங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதேபோல் இவரது மகள் அன்சியா பாத்திமா அரசு பெண்கள் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் பீகார் மாநிலம், பாட்னா அருகில் உள்ள சரண் மாவட்டம், மர்கூரா, தேனுகி கிராமத்தை சேர்ந்த 17 வயது பாலகுமார் பொள்ளாச்சியில் இறந்து விட்டார். அவரை ஆம்புலன்ஸில் பாட்னா எடுத்துச் செல்வதற்காக கடந்த கடந்த 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி சென்று அங்கிருந்து அவர் பிரேதத்தை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு சுமார் 2 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் பயணம் செய்து பாட்னா சென்றார்.
இவருடன் கோவையை சேர்ந்த மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவர் சேக் மொய்தீன் என்பவரும் சென்றார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 65 மணி நேர பயணத்திற்கு பிறகு 26 ஆம் தேதி காலை 7 மணிக்கு பாட்னாவில் உள்ள வீட்டில் பிரேதத்தை இறக்கிவிட்டு பின்னர் தமிழகம் புறப்பட்டனர்.
ஆம்புலன்சில் சுமார் 80 கிலோ மீட்டர் தாண்டி வந்த நிலையில் அங்கு சாலை ஓரத்தில் இருந்த ஒரு டீ கடையில் உருளைக்கிழங்கு சமோசா மற்றும் டீ சாப்பிட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் குளம் இருக்கவே அந்த குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது வீடு ஞாபகம் வரவே அதற்கு தனது செல் போனில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசி உள்ளார். அப்பொழுது அபுதாகிர் குளத்தில் குளிக்க செல்வதாக கூறிய போது வீட்டில் இருந்தவர்கள் அங்கு குளிக்க வேண்டாம் என்று சொல்லி தடுத்துள்ளனர்.
அதற்கு அபுதாஹிர் கடந்த 2 நாட்களாக குளிக்கவில்லை. உடம்பு உப்புசமாக, ஒரு மாதிரியாக உள்ளது என்று கூறிவிட்டு மனைவியிடம் சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று செல்போனை ஆப் செய்து விட்டு, பின்னர் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். குளத்தின் ஓரத்தில் ஆழமில்லாத பகுதியில் தான் குளித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது குளத்தில் மூழ்கி குளித்த போது திடீரென மூச்சு திணறி குளத்திற்குள் மயங்கி உள்ளார்.
சிறிது நேரம் கழித்து மேலே வந்த அவரை உடன் வந்த சேக் மொய்தீன் மற்றும் அங்கிருந்த சிலர் அவரை தூக்கி கொண்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறவே, பின்னர் அங்கிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நிலைமையை அறிந்த டாக்டர் குழுவினர் உடனடியாக போஸ்ட்மார்ட்டம் செய்து கொடுத்து தமிழகம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். பின்னர் அன்று மாலை ( 26 ஆம் தேதி ) பிரேதத்தை எடுத்து சென்ற அதே ஆம்புலன்சில் அபுதாஹிர் உடல் ஏற்றப்பட்டு, ஆம்புலன்ஸை உடன் சென்ற டிரைவர் சேக்கும், பீகாரில் உள்ள ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரும் சேர்ந்து கொண்டு திருப்பூர் நோக்கி புறப்பட்டனர். இதனையடுத்து 28 ந் தேதி மாலை 7 மணிக்கு திருப்பதி வந்து அடைந்தது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு வந்தது. பின்னர் அப்பவே அபுதாஹிர் பிரேதம் மங்கலத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மங்கலம், திருப்பூர் பகுதி பொதுமக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் சோகமாக, துயரத்துடன் அபுதாஹிர் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்து செல்கின்றனர்.
உயிர் காக்கும் உன்னத பணியில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அபுதாஹிர் சேவை மனப்பான்மையுடன் பீகார்காரர் உடலை ஏற்றி கொண்டு சென்றவர் அதே ஆம்புலன்சில் பாடியாக வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கொரோனா பாதிக்கப்பட்ட காலத்தில் உயிரை பயணம் வைத்து அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பலரை காப்பாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.





