பிரியாணி சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம்..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட் (SIPCOT) வளாகத்தில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
வழக்கம் போல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மதிய உணவாகத் தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் ஊழியர்கள் அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, ஊழியர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கின.
ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தொழிற்சாலை வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு உணவு சமைத்து விநியோகம் செய்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை கந்தன்சாவடியில் உள்ள சிக்கன் விநியோக நிறுவனத்தையும் தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





