--- --:--:-- --

அழிவின் விளிம்பில் உள்ள மண்பாண்ட தொழிலை மீட்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

4.1

ழிவின் விளிம்பில் உள்ள மண்பாண்ட தொழிலை
மீட்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுடு களிமண் சிற்ப கலைஞர் பத்மஸ்ரீ வி.கி முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.

 

மைசூர் மஹாராஜாவின் நண்பரும், அரண்மனையின் தமிழ்நாடு பிரதிநிதியும், திருப்பூர் சாந்தி குரூப்ஸ் நிறுவனருமான திருமூர்த்தி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருமுருகன்பூண்டி அணைப்புதூர் ஐ கே.எப் மஹாலில் நடந்தது. கடந்த வாரம் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பத்மஸ்ரீ விருது பெற்ற சுடு களிமண் சிற்ப கலைஞர் பத்மஸ்ரீ வி.கி முனுசாமி முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு குறிப்பாக திருப்பூர் வந்து இருந்தார்.

 

அப்போது நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது :
நான் பாண்டிசேரி, வில்லியனூர், கணுவாய் பேட்டை புதுநகர் 4 வது தெருவில் வசித்து வருகிறேன். எங்களது குடும்பத்தினர் 21 தலைமுறையாக குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்யும் தொழில் செய்துவருகிறோம். நான் 22 வது தலைமுறையாக செய்து வருகிறேன்.

 

எனது குடும்ப சூழ்நிலை காரணமாக இதே தொழிலை செய்து வருகிறேன். 40 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்தது இந்த தொழில். எனது தந்தை கிருஷ்ண பக்தர் மாநில விருது வாங்கியவர். எனது தாயார் மங்கலட்சுமி தமிழக அரசின் கலைமாமணி விருது வாங்கியவர். எனக்கு கவிதா என்ற மனைவியும், உமாமகேஸ்வரி, சுபாஷிணி என 2 மகள்களும், யேமசந்திரன் என்ற மகனும் உள்ளனர்.

 

நான் இதுவரை 3 லட்சம் மாணவ, மாணவிகளுக்கும், 10 ஆயிரம் வேலையில்லா இளைஞர்களுக்கும், 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் இலவசமாக சுடு களிமண் சிற்பங்கள் குறித்து இலவசமாக பாடங்கள் மற்றும் செயல்முறை பயிற்சி கொடுத்துள்ளேன். இந்த சேவையை பாராட்டி மத்திய அரசு எனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினர். இதுவரை, 1991 ஆம் ஆண்டு மாநில விருது, 2 தடவை மகாத்மா காந்தி விருது, 4 தேசிய நற்சான்றிதழ் விருது, 2006 ஆம் ஆண்டு தேசிய விருது, 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ விருது, புவிசாரக்குறியீடு விருது, சில்ப குரு அவார்டு மற்றும் பல்வேறு சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தந்த விருதுகள் என 78 விருதுகள் வாங்கியுள்ளேன். இதுபோக உலக அளவில் 3 இன்டர்நெஷனல் விருதுகள் வாங்கியுள்ளதாக கூறினார்.

 

மண்பாண்ட தொழிலில் அரை சென்டிமீட்டர் அளவிலிருந்து செய்யத் தொடங்கியதால் உலக அளவில் நான் பேசப்பட்டு வருகிறேன். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய 5 பூதங்களும் மாசுபட்டு இருக்கிறது. தற்போது 2 அடி ஆழம் வரை நிலம் கெமிக்கல் உபயோகிக்கப்படுவதால் மாசுபட்டு மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்காள விரிகுடா கடற்பகுதியில் நல்ல களிமண் கிடைக்கிறது. இந்த மண்ணை எடுத்து செய்வதால் கொலு பொம்மைகள் உள்பட மண்ணால் செய்யும் சிற்பக்கலை நன்றாக வருகிறது.

 

 

கீழடி போன்ற இடங்களில் கிடைத்த பொருட்கள் தான் சிந்து, ஹரப்பா போன்ற இடங்களில் கிடைத்துள்ளது.  ஒவ்வொரு கிராமத்திலும் மண்பாண்ட கலையை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மியூஸியம் அமைத்து தரவேண்டும். ஒரு கலை, ஒரு கிராமம் என்று வந்தாலே போதும்.

 

இயற்கை விவசாயத்திற்கு நாம் மாற வேண்டும். குலத்தொழிலை ஊக்குவிக்க வேண்டும். அரை நாள் ஏட்டுக்கல்வி, அரை நாள் தொழிற்கல்வி கொடுக்க வேண்டும். இதன்மூலம் ஒவ்வொரு வீட்டிலும் தொழில் அதிபர்கள் உருவாவார்கள். கனவுகள் மெய்ய்ப்பட்டு வருகிறது. தேடல் நிறைய வேண்டும். இதனால் யாரும் தொழிலாளியாக மாட்டார்கள்.

 

6 ம் வகுப்பு முதல் கைத்தொழிலை கற்று தர வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள சட்டி,பானை தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து நிலங்கள் கொடுத்து, பொதுவான தொழிலில் உள்ள குறைகளை நீக்கி, ஊக்குவித்தால்தான் இந்த தொழிலை முன்னேற்றம் அடையும். பலர் இந்த தொழிலை விட்டுவிட்டு கொத்தனார் போன்ற தொழிலுக்கு செல்கிறார்கள். மீனவர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு கொடுப்பது போல் எங்களுக்கும் கொடுக்க வேண்டும். மழைக்காலங்களில் நிவாரணம் தர வேண்டும். அழிவின் விளிம்பில் உள்ள மண்பாண்ட தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Right Menu Icon