தவறு செய்யும் ஆட்டோ, வேன் டிரைவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!
கொங்கு நகர் போலீஸ் உதவி ஆணையர் அனில் குமார் அறிவுரை
திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை சுமார் 6 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பெற்றோர்களால் 2 சக்கர வாகனம் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள்.
3500 க்கும் மேற்பட்டோர் திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் இருக்கும் தங்கள் வீடுகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் வருகிறார்கள். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஆட்டோ மற்றும் வேன்கள் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள். இவ்வாறு அழைத்து வரப்படும் மாணவிகள் பல்வேறு இன்னல்களால் பாதிக்கப்படுவதாக புகார் வந்தது.
இதனையடுத்து ஜெய்வாபாய் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 18 ந் தேதி வாகனங்கள் மூலம் மாணவிகளை அழைத்து வரும் ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களின் கலந்துரையாடல் மற்றும் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.

இதனையடுத்து சிலர் மீது மீண்டும் பல்வேறு புகார்கள் வரவே 2 வது கட்டமாக போலீஸ் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு உதவி ஆணையர் அணில் குமார் தலைமை தாங்கி பல்வேறு போட்டோ ஆதாரங்களை வைத்து பேசினார்.
அப்போது இனிமேல் ஆட்டோவில் அதிக குழந்தைகளை ஏற்றி வரக்கூடாது. வாகனங்களை வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். அதேபோல் ஆட்டோ முன்பக்கத்தில் டிரைவர் அருகில் பெண் குழந்தைகள் உள்பட யாரையும் ஏற்றி வரக்கூடாது. இனிமேல் இதுகுறித்து புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மோட்டார் வாகன சட்டப்படி பறிமுதல் செய்யவும் அந்த துறைக்கு பரிந்துரை செய்யப்படும். இது எச்சரிக்கை அல்ல. அறிவுரை மட்டுமே. பெற்றோர்களோ அல்லது பொதுமக்களோ வீடியோ அல்லது போட்டோ ஆதாரத்துடன் புகார் செய்தால் சட்ட நடவடிக்கை கடுமையாக இருக்கும். என்றார்.
பின்னர் ஜெய்வாபாய் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் முத்தமிழ் செல்வன் பள்ளிக்கு முன்பு நடக்கும் சில தவறுகளை எடுத்து கூறினார். பின்னர் ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், ராஜசேகர், தாமோதரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சாய்தா பானு, பிரமு அம்மாள், அய்யப்பன், சஃபியுல்லா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.





