ஸ்டாலின் திருச்சி வருகை: 2 நாள் ஃட்ரோன்கள் பறக்க தடை
திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு 2 நாட்கள் அவர் பயணிக்கும் சாலைகளில் ஆளில்லாத விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி செல்கிறார். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, இரவு சாலை வழியாக திருச்சிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி வயலூர் அருகே உள்ள சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் கலந்து கொள்கிறார். இந்த விழாவைத் தலைமை தாங்கும் முதலமைச்சர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றவுள்ளார்.
பின்னர், திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பாவை அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அன்புச்சோலை முதியோர் இல்லத்தின் புதிய செயல்பாடுகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதன்பின் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்கின்றார்.
முன்னதாக, நாளை, நாளை மறுதினம் திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் பங்கேற்பதை முன்னிட்டு இரண்டு நாட்கள் முதல்வர் பயணிக்கும் சாலைகளில் ஆளில்லாத விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.





