--- --:--:-- --

அதிமுகவினரின் ரூ.10,000 டோக்கன் விநியோக விவகாரம் : வழக்கை முடித்து வைத்த ஐகோர்ட்

1

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் விநியோகித்து வரும் பத்தாயிரம் ரூபாய் QR கோட் டோக்கன்கள் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

அதில், சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோவுக்கு ஆதரவாக வாக்களிக்க ஒவ்வொரு வீட்டிற்கும் கியூ ஆர் கோட் டோக்கன்கள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு இந்த க்யூ ஆர் கோடுகளை பயன்படுத்தி பத்தாயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொள்ளுமாறு அதிமுகவினர் தெரிவித்து வருவதாகவும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மதிகாரி மற்றும் அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பாக இதுவரை இரண்டு புகார்கள் வந்ததாகவும் இது குறித்து பறக்கும் படை சோதனை நடத்தியபோது, எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்தார். மேலும் இந்த புகார் குறித்து காவல்துறை உதவியுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதால் வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon