சாத்தான்குளம் சம்பவம் : காவலர் முத்துராஜ் தலைமறைவு … தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சிபிசிஐடி!!
சாத்தான்குளத்தில் போலீஸ் சித்ரவதையில் தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவலர் முத்துராஜ் தலைமறைவாகியுள்ளார். இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரின் சிறைக் கொட்டடி மரணம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் அதிரடி உத்தரவுப்படி சிபிசிஐடி விசாரணை வேகமெடுத்தது. இதனால் இரண்டே நாட்களில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்தேறின. இருவரின் மரணம், கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.

முதலில், நேற்று முன் தினம் இரவு சாத்தான்குளம் எஸ்.ஐ.ரகு கணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்து இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டது அறிந்து, தலைமறைவாக தப்பி ஓட முயன்ற இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொரு காவலரான முத்துராஜ் இன்னும் சிக்கவில்லை. தலைமறைவாக உள்ள அவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சாத்தான்குளத்தில் விசாரணையை கண்காணித்து வரும் சிபிசிஐடி ஐ.ஜி.சங்கர் கூறுகையில், காவலர் முத்துராஜை பிடிக்க தீவிர தேடுதல் நடந்து வருகிறது. முத்துராஜை தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை யாரும் அப்ரூவர் ஆகவில்லை. சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என ஐ.ஜி.சங்கர் தெரிவித்தார்.






