பிரதமர் மோடி லடாக் பகுதியில் திடீர் ஆய்வு எல்லையில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் மோடியின் பயணத்தால் பரபரப்பு
பிரதமர் மோடி இன்று லடாக் பகுதிக்கு திடீர் பயணம் மேற்கொண்டு ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இந்திய – சீன எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதி 11ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி ஆக்ரமிப்பில் ஈடுபட முயன்றனர். இதற்கு இந்தியத் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இரு நாட்டு அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு இடையே, கடந்த மாதம் இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமும் அடைந்தனர். சீன ராணுவத் தரப்பில் பலி எண்ணிக்கை, இந்தியத் தரப்பை விட இரு மடங்காக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் சீனா மவுனம் சாதித்து வருகிறது.

“கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து லடாக் பகுதியின் எல்லையில் இந்திய – சீன படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டு வருவதால் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று லடாக் பகுதிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்”
முப்படைகளின் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்துடன் லடாக் பயணமான பிரதமர் மோடி, அங்கு 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளலே பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமுக்கு சென்றார். அங்கு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் காயமடைந்து சிகிச்சையில் உள்ள இந்திய வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அந்தப் பகுதியில் பிரதமர் மோடி ஆய்விலும் ஈடுபட்டார்.
“இந்தியா – சீனா இடையே போர்ப் பதற்றம் நீடித்து, இரு நாட்டு படைகளும் எல்லைகளில் குவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடியின் லடாக் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது”






