--- --:--:-- --

தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை விவரிக்கும் த.வெ.க. அரசின் பட்ஜெட்..!

10

மிழககத்தில் த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்டை நேற்று (ஆகஸ்ட் 4) தாக்கல் செய்த தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், அரசின் உடனடி நலத்திட்டங்களைத் தாண்டி நீண்டகால பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான வளர்ச்சி பார்வையை முன்வைத்தார்.

 

 

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புதுமை நகரம், புதிய விண்வெளி தொழில் வழித்தடம், டிஜிட்டல் ஆளுமை, நவீன தளவாட உள்கட்டமைப்பு மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சென்னை பெருநகரம் ஆகியவற்றின் மூலம் 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே அரசின் இலக்காக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

 

பெரிய அளவிலான மூலதனத் திட்டங்களை மையமாகக் கொண்ட பாரம்பரிய தொழில்துறை பட்ஜெட்டுகளில் இருந்து மாறுபட்டு, இந்த வளர்ச்சி வரைமுறையின் பெரும்பாலான திட்டங்கள் தற்போது கொள்கை வடிவமைப்பு, சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் நிறுவனச் சீர்திருத்தம் போன்ற ஆரம்ப கட்டங்களிலேயே உள்ளன. இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான மற்றும் லட்சியமிக்க திட்டங்களில் ஒன்று “அறிவகம்” ஆகும்.

 

 

இது இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமை நகரமாக உருவாக்கப்படவுள்ளது. இதில் ஏ.ஐ பல்கலைக்கழகம், அரைக்கடத்தி (Semiconductor) சோதனை மையங்கள், ஆராய்ச்சி வளர்ப்பு மையங்கள் (Research Incubators), சர்வதேச திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட உள்ளன. எனினும், இதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்காக தற்போது ரூ.5 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

அதேபோல், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை விண்வெளி தொழில்துறை முதலீட்டு மண்டலமாக (Space Industrial Investment Zone) உருவாக்க அரசு அறிவித்துள்ளது. குலசேகரப்பட்டினத்தில் உருவாகவுள்ள விண்வெளி ஏவுதளத்தை (Spaceport) மையமாகக் கொண்டு விண்வெளி உற்பத்தி மற்றும் துணைத் தொழில்களை ஈர்க்கும் வகையில் இந்தத் திட்டம் அமையும். இதனுடன் புதிய தொழில்துறை கொள்கை, புதுப்பிக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு கட்டமைப்பு, தொழில்துறை திறன் அடைவு (Industrial Capability Directory), உலகத் தமிழர் முதலீட்டு திட்டம் ஆகியவற்றையும் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

 

 

தமிழகத்தின் பாரம்பரிய வலிமைகளாக இருந்த ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் மின்னணு உற்பத்தித் துறைகளைத் தாண்டி, செயற்கை நுண்ணறிவு, அரைக்கடத்தி, ஆழ்ந்த தொழில்நுட்பம் (Deep Technology), விண்வெளி தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகளில் மாநிலத்தை முன்னேற்றுவதற்கான முயற்சியாக இந்த அணுகுமுறை பார்க்கப்படுகிறது.

 

 

இந்த பொருளாதார வளர்ச்சி திட்டத்தில் மனிதவள மேம்பாட்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட டி.என். ஸ்பார்க் (TN-SPARK) திட்டத்தின் மூலம் பள்ளி நிலையிலிருந்தே ஏ,ஐ கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் (Machine Learning) பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகின்றன.

 

 

தொழில்துறையுடன் இணைந்த பயிற்சிப் பணிகள் (Internships) விரிவுபடுத்தப்படுவதோடு, ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 2031-ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவர்களுக்கு ஏ.ஐ பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலேயே 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் திறன் மேம்பாட்டு திட்டங்களின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

நகர்ப்புற வளர்ச்சி அரசின் பொருளாதார பார்வையின் இரண்டாவது முக்கிய தூணாக அமைந்துள்ளது. இதற்காக முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி இயக்கம் (Chief Minister’s Integrated Urban Development Mission) அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து, பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, பசுமைப் பகுதிகள் மற்றும் ஏ.ஐ அடிப்படையிலான நகர்ப்புற நிர்வாகம் ஆகிய அனைத்தையும் ஒரே திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்க ரூ.2,117 கோடி இந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும், 5,904 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்பட்ட சென்னை பெருநகரப் பகுதிக்கான முழுமையான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி ஆணையம் (CMDA), நகர மற்றும் ஊரக திட்ட இயக்ககம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிகளை ஒரே இணைய தளத்தில் ஒருங்கிணைக்கும் ஸ்பீடு (SPEED) என்ற ஏ.ஐ ஆதரவு ஆன்லைன் திட்ட அனுமதி அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

 

வீட்டு வசதிக்கும் இந்த பட்ஜெட்டில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மை-ஹோம் (Metropolitan Youth and Family Housing Scheme) திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்காக டிஜிட்டல் வாடகை வவுச்சர் (Digital Rental Voucher) முறையுடன் கூடிய 1 லட்சம் வீடுகள் அடுத்த ஏழு ஆண்டுகளில் அரசு-தனியார் கூட்டாண்மை (PPP) மூலம் கட்டப்படவுள்ளன. அதேசமயம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்களின் கீழ் 38,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டும் பணிகளும் தொடரும்.

 

 

போக்குவரத்து உள்கட்டமைப்பிலும் ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் முதல் 11 நிலையங்களை உள்ளடக்கிய 14.64 கிலோமீட்டர் பாதை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon