“500 ஆண்டுகால கனவு நிறைவேறியது”!! அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!!
ராமபிரான் பிறந்த புண்ணிய இடத்தில் பிரமாண்ட கோவில் எழுப்ப வேண்டும் என்ற இந்துக்களின் 500 ஆண்டுகால கனவு இன்று நிறைவேறியது. ராம ஜென்ம பூமியில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
இந்துக்களின் முக்கியக் கடவுளாக வணங்கப்படும் ராமபிரான் பிறந்த இடம் அயோத்தி . இங்கு ராம ஜென்ம பூமியில் அவருக்கு எழுப்பப்பட்டிருந்த கோவிலை, 500 ஆண்டுகளுக்கு பின்னர் முஸ்லீம் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் ஆக்ரமிக்கப்பட்டு அங்கு பாபர் மசூதி எழுப்பப்பட்டதாக சர்ச்சை நீண்டு வந்தது. நான்கைந்து நூற்றாண்டுகளாக நீடித்த இந்த சர்ச்சை கடந்த நூற்றாண்டின் இறுதியில் விஸ்வரூபம் எடுத்தது.
1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் கொந்தளிப்பு நிலவிய நிலையில் , கடந்த ஆண்டு நவம்பரில் சர்ச்சைக்குரிய அந்த இடம் ராம ஜென்ம பூமிக்கு சொந்தம் எனவும் அங்கு ராமர் கோவில் கட்டலாம் எனவும் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
இதன் பின் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு, கோவில் கட்டுமானப் பணிக்கான ஆரம்ப கட்டப் பணிகள் மும்முரம் அடைந்தன. அதன்படி, பிரமாண்டமாக எழுப்பப்பட உள்ள ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ஜெய் ஸ்ரீராம் கோஷம்
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, இன்று பிற்பகல் 12 .40 மணிக்கு 40 கிலோ எடையிலான வெள்ளியிலான செங்கல்லை நாட்டி அடிக்கல் நாட்டினார். அப்போது வேத மந்திரங்கள் முழங்க ஜெய் ஸ்ரீராம் கோஷம் அயோத்தி மாநகரம் மட்டுமின்றி நாடு முழுமைக்கும் ஒலித்தது.
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு அயோத்தி நகரம் முழுவதும் வண்ணமயமாக திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பிரமாண்டமாக லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்த முன்னர் திட்டமிடப்பட்டது.

ஆனால் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆளுநர் ஆனந்தி பென் பாட்டீல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக துணைத் தலைவர் உமாபாரதி உள்பட 175 முக்கிய விவிஐபிக்கள் மட்டும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.







