விஜயின் வாக்கு சதவிகிதத்தை பொறுத்து தமிழக அரசியல் களம் மாறும் – திருமாவளவன்
திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் “விஜய் வாங்குகிற வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்து, தமிழ்நாடு அரசியல் களம் மாறும்” என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார். சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக தேர்தலில் வழக்கமான வாக்குப்பதிவுதான். இதில் வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது.
சிறப்பு திருத்தம் மூலம் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வாக்குகள் நீக்கம் செய்யப்படாமல் இருந்து வாக்குப்பதிவு நடந்து இருந்தால் பழைய மாதிரியே வாக்குப்பதிவு நடந்து இருக்கும் என்று நாம் பேசி இருப்போம். ஆனால் சிறப்பு திருத்தம் மூலம் பதிவு செய்யப்படாமல் எண்ணிக்கையில் மட்டும் இருந்த லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் கூடுதலாக வாக்குப்பதிவு ஆகி இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. இது உண்மை இல்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் 5 ஆண்டுக்குப் பிறகு புதிய வாக்காளர்கள் 20 லட்சம் பேர் இணைவார்கள்.
அது எண்ணிக்கையில் கூடுதலாக சேரும். இந்த தேர்தலில் 20 முதல் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ந்து உள்ளனர் அவ்வளவுதான். இந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும். களத்தில் நேரடியாக மக்களை சந்தித்த அனுபவத்தில் இருந்து உணர்கிறோம்.”என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். தற்போதைய நிலவரம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தொங்கு சட்டமன்றம் அமையும் என்று நான் சொல்லவில்லை. தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறும் என்றுதான் சொல்லி இருந்தேன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் வாங்குகிற வாக்குகள் சதவீதத்தைப் பொறுத்து, தமிழக அரசியல் சூழல் மாறும் என்ற பொருளில் சொல்லி இருந்தேன்; அவ்வளவுதான். தேர்தல் முடிவு வரட்டும்” என அவர் தெரிவித்தார்.





