பரமக்குடியில் துணைத் தலைவர் பதவி கிடைக்காத ஆத்திரம்..! அதிமுக ஒன்றிய கவுன்சிலர் திடீர் ராஜினாமா!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஒருவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட, ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.இதில் பல இடங்களில் அடிதடிச் சம்பவங்களும் அரங்கேறின.
மேலும் கட்சி மாறி வாக்களித்தது, ஓட்டுப் பெட்டியை தூக்கிச் சென்றது, நெஞ்சுவலி என தேர்தல் அதிகாரியே தேர்தலை ரத்து செய்தது என பல சுவாரஸ்யங்களும், திடுக் சம்பவங்களும் அரங்கேறி இன்று பல இடங்களில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது.

இதில், பரமக்குடி ஒன்றியத்தில், அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த கவுன்சிலர் ஒருவர், தமக்கு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காத ஆத்திரம், கோபத்தில் பதவியையே ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரமக்குடி ஒன்றியம் அரியனேந்தலைச் சேர்ந்த 7-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரன். இவர் தமக்கு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு மாவட்டச் செயலாளர் முனியசாமியிடம் கேட்டுள்ளார்.
ஆனால் வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பை வழங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாவட்ச் செயலாளருடன் தகராறு செய்த ராஜேந்திரன், திடீரென தமது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, மாவட்ட ஆட்சியருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டார்.
ராஜேந்திரனின் திடீர் ராஜினாமாவால் பரமக்குடி ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலும் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மாலையில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில், போதிய கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டதும், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜினாமா செய்ததும் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.





