--- --:--:-- --
சாமிநாதன்

தாராபுரம் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் சாமிநாதன்

காங்கேயம்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சர் எம்.எஸ். சாமிநாதன், தனது சொந்தத் தொகுதியைக் கடந்து அண்டைத் தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

காங்கேயம் மற்றும் வெள்ளக்கோவில் ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்த கையோடு, தாராபுரம் தொகுதி வேட்பாளருக்காகவும் அவர் களமிறங்கியது உடன்பிறப்புகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் சாமிநாதன் காலை முதலே வெள்ளக்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். முத்துக்கவுண்டன்பாளையம், சம்பாம்பாளையம் மற்றும் பெருங்கருணைபாளையம் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து நல்லூர்பாளையம், செட்டியார்பாளையம் பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றவாறு உதயசூரியன் சின்னத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

 

saminathan
அமைச்சர் சாமிநாதனின் பேச்சை ஆர்வமுடன் கேட்கும் மக்கள்

புளியங்காட்டுப்புதூர், வரட்டுக்கரை, அமராவதிபாளையம் என வரிசையாகப் பல கிராமங்களைக் கடந்த அமைச்சரின் பிரச்சார வாகனம், மேட்டாங்காட்டுவலசு கடைவீதியை அடைந்தபோது அங்கு திரண்டிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அவர் நலம் விசாரித்து ஆதரவு கோரினார். ராசாத்தாவலசு வரை நீடித்த இந்தப் பிரச்சாரத்தில், அரசின் சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சொந்தத் தொகுதியில் பணிகளை முடித்த அமைச்சர், கூட்டணிக் கட்சி மற்றும் கட்சி மேலிடத்தின் உத்தரவுக்கிணங்க தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் விரைந்தார். அங்கு திமுக வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டர் இந்திராணியை ஆதரித்து மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பை ஊராட்சியில் அவர் வாக்கு சேகரித்தார். புதுப்பை பகுதியில் திரண்டிருந்த வாக்காளர்களிடையே பேசிய அமைச்சர், டாக்டர் இந்திராணியின் மருத்துவச் சேவையையும், தொகுதி வளர்ச்சிக்கு அவர் கொண்டு வரப்போகும் திட்டங்களையும் சிலாகித்துப் பேசினார்.

ஒருபுறம் சொந்தத் தொகுதியான காங்கேயத்தில் உள்ள குக்கிராமங்களையும் விடாமல் வலம் வரும் அமைச்சர், மறுபுறம் அண்டை தொகுதியான தாராபுரத்திலும் டாக்டர் இந்திராணிக்காக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருவது திமுக தொண்டர்களைக் கூடுதல் வேகத்துடன் தேர்தல் பணியாற்றிடத் தூண்டியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon