திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன நேரத்தில் அதிரடி மாற்றம்..!
திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன நேரம் குறைப்பால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, தினசரி வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், 100 ரூபாய் கட்டணம், பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கான வரிசையில் இரவு 8 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், சாமி தரிசன நேரத்தை குறைத்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, கட்டண தரிசனத்திற்கு மாலை 6 முப்பது மணி வரையிலும், பொது மற்றும் மூத்த குடிமக்கள் இரவு 7 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், முக்கிய மற்றும் விஷேச காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்கு உட்பட்டது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் இரவு நேரங்களில் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



